நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி

 


இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும்  மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம்,  நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர் முருகப்பெருமானின் உற்சவ காலத்தை முன்னிட்டு, இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினையும் ஆன்மிகக் கலைஞர்களையும் சமயச் சொற்பொழிவாளர்களையும் சமய சமூக நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இளம் இந்துச் சிறார்களுக்கு அவர்கள் மனம் ஏற்றுக்கொள்கின்ற வளரும் சிறு பருவத்திலேயே உயர்வான வாழ்வின் மதிப்பீடுகளை நன்கு கிரகித்துக் கொள்ளவும் ஒழுக்கம் தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும் மனதிலும் உணர்ச்சிகளிலும் அறிவிலும் நீதி நெறி வழியிலும் ஆன்மிகத்திலும் மலர்ந்து விரிந்து முழுமையான ஆளுமைத் தன்மையை வளர்க்கவும் வழிகாட்டவும், எமது சமய வழிபாட்டு முறைகள் கலைகள் தொடர்பான விடயங்களைக் கண்ணாரக் காணவும் கலைஞர் பெருமக்கள் மற்றும் சமயச் சொற்பொழிவாளர்கள் தங்கள் ஆற்றல்களை  வெளிக்கொணரச் செய்வதற்கான களம் அமைத்தலும் ஆன்மிக அம்சங்கள் ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தைச் சென்றடையச் செய்வதுமே, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நிகழ்வினை வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்றமைக்கான நோக்கமாகும்.

ஆரம்பத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் "ஆன்மிகச் சிந்தனையும் சமயச் சொற்பொழிவும் கலைநிகழ்வுகளும்" எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

ஒரு தசாப்த கால நிறைவிற்குப் பின் அதாவது, 2015 தொடக்கம் இந்நிகழ்வு, இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் ஆளுமைகளை  வெளிக்கொணருமுகமாக "அருள்நெறி விழா - 2015", "அருள்நெறி விழா – 2016"எனும் பெயர்களில் வெகு சிறப்பாகத் தொடர்ந்து   முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 2017 இல் நல்லூர் உற்சவ காலத்தினை முன்னிட்டு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கலைநிகழ்வுகள் அரங்கேறும் "அருள்நெறி விழா - 2017" நிகழ்வினையும்  நல்லை  திருஞாசம்பந்தர் ஆதீனக் கலாமண்டபத்தில், “கந்தபுராண கலாசாரம் இந்த மண்ணின் அடையாளம்” என்னும் தொனிப்பொருளில், முதன்முறையாகக் சுந்தபுராண வாழ்வியல் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறும் "கந்தபுராண எழுச்சிவிழா" பக்திபூர்வமாகக் கொண்டாடியது.  

கந்தபுராண எழுச்சி விழாவிற்கு முன்னோடி நிகழ்வாக, நல்லை நகர் நாவலர் பெருமான் படைத்தருளிய கந்தபுராண வசனம் என்னும் நூல் சைவப் பிரகாசப் பதிப்பகத்தினரின் முயற்சியில், இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் "கந்தபுராண வசனம் - நூல் வெளியீடு" வரலாற்று நிகழ்வாக, 19.07.2017 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில், நல்லைக் கந்தன் திருவடிகளில் வைத்துக் கந்தபுராண வசன நூல் வெளியீடு பக்தி பூர்வமாகப் பூஜைகளோடு இடம்பெற்று, பின்னர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நாவலர் பெருமான் திருவுருவச் சிலைக்கும் கந்தபுராண வசனம் அர்ப்பணம் செய்யப்பட்டு இன்றுவரை காட்சிப் பொருளாகவுள்ளது. 

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் “அருள்நெறி விழா” என்னும் பெயரிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில்  "கந்தபுராண எழுச்சி அருள்நெறி விழா"  என்னும் பெயரிலும் தெய்வீக நிகழ்வினைக் கொண்டாடி மகிழ்ந்தது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அகில இலங்கை இந்துமாமன்றத்தோடு இணைந்து, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் மூலமாகத் “தெய்வீகத் திருக்கூட்டம்” தொடர் நிகழ்வினை, நல்லை ஆதீன கர்த்தாவும் முதலாவது குருமஹா சந்நிதானமுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் குருபூஜை நன்னாளிலே ஆரம்பித்தது. 05.04.2022 வெள்ளிக்கிழமை, மாலை 4.00 மணிக்கு, குரு பூஜை நிகழ்வோடு ஆரம்பமாகிய இத் தெய்வீக நிகழ்வின் தொடக்க வைபவம், நல்லை ஆதீன ஆலயத்தில் குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபம் நோக்கி விருந்தினர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் சகிதம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, நிகழ்வுகள் சிறப்புற அரங்கேறின.  

அன்று தொடக்கம் இன்று வரை, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில், நல்லூர் முருகப்பெருமானின் உற்சவ காலத்தை முன்னிட்டு, இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினையும் கல்விமான்களையும் ஆன்மிகக் கலைஞர்களையும் சமயச் சொற்பொழிவாளர்களையும் சமய சமூக நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, “தெய்வீகத் திருக்கூட்டம்” நிகழ்வினைச் சிறப்புற முன்னெடுத்து வருகிறது.

இலவசப் போக்குவரத்து ஒழுங்குகள், ஆளுமைத் திறன்களை வெளிக்கொணருவதற்கான களம், ஆன்மிகத் தேடல், வாழ்வாதாரச் சூழல்களால் நல்லூர் முருகனின் திருக்கோலத்தினை நேரில் காண முடியாத எத்தனையோ இளம் இந்துச் சிறார்களுக்கு    இதனை ஒரு வரப்பிரசாதமான சந்தர்ப்பமாக அமைத்துக் கொடுப்பதில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பெருமைகொள்கிறது.

" மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் " 


ய.அநிருத்தனன்

பணிப்பாளர் 

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்



Post a Comment

Previous Post Next Post