ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்கேற்புடன் இயங்குகின்ற பல்வேறு சமுக மட்ட அமைப்புகளானவை காத்திரமான பங்கினை வகித்து வருகின்றன. சமூக அசைவியக்கத்தில் இவற்றின் வகிபாகமானது மட்டிடற்கரியவாறான சிறப்புக் கூறுகளை தன்னகத்தே கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். சமூக மட்ட அமைப்புகளானவை தொழிற்பாட்டு ரீதியில் பல்வேறு வகைப்பட்டனவாறானவையாக காணப்படினும் அவற்றுள் முதன்மையானவையாக சனசமூக நிலையங்களே சிறப்புற்று விளங்குகின்றமை நோக்கத்தக்கது. தமிழ் சமுகத்தினை பொறுத்தவரையில் தொன்றுதொட்டு மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்நிறுவன அமைப்புகள் ஒரு சமூகத்தினைத் திசைமுகப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. முற்று முழுதாக மக்கள் நலன்சார்ந்து இயங்குகின்ற பொதுமக்களின் சமூக, பொருளாதார, கலாசார விழுமியக் கூறுகளை பேணி ஓழுகி சமூகத்தின் இருப்பினையும் மேன்மையினையும் பேண்தகு நிலையில் நிலைநிறுத்தி நிற்கும் இவற்றின் தாற்பரியத்தை பல் தளங்களின்றும் சிலாகித்துரைக்க முடியும். குறிப்பாக சொல்லப் புகின் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேலுயர்த்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இவற்றின் கடமைகளில் முக்கியமானதாகும். இலகு கடன் திட்டங்களிலிருந்து வருமானத்தை மீட்டுருவாக்கம் செய்கின்ற சகல மக்கள் நலத் திட்டங்களையும் கிராமம் தோறும் நடைமுறைப்படுத்தல் இவற்றின் முக்கிய பணியாக அமைகின்றது. இது சமுகத்திலுள்ள வருமான சமமின்மையினைக் குறைக்கின்ற செயற்பணியாக அமைகின்றது. ஒரு சமுகம் நிலைத்திருப்பதற்கு பொருளாதாரம் மட்டும் சிறப்புற்றிருந்தால் மட்டும் போதாது. இனத்தின் சிறப்பினை இருப்பினை உலகிற்கு உணர்த்தி நிற்பதற்கு பண்பாட்டு விழுமியக் கூறுகளையும் கட்டிறுக்கமான முறையில் பேணி ஒழுகுதலும் முக்கியமானதாகும். இதற்கான எத்தனங்களை மேற்கொள்வதற்கேற்றவாறான அகப்புறச் சூழமைவைத் தோற்றுவிக்க வேண்டிய கடப்பாடு சனசமுக நிலையங்களுக்கே இருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தை பொறுத்தவரையில் அழகான ஆரங்களாக அமைபவை ஒழுக்கமிகு கல்வியும் மரபார்ந்த கலை, கலாசார, விழுமியங்கள்தாம். இவை வேற்றினங்களிலிருந்து நம்மை தனித்துவப்படுத்தி காட்டுபவை. இவற்றின் வளர்ச்சியில் சிறப்பான பங்கினை நல்குபவையாக இவ்வமைப்புகள் விளங்குகின்றன. தமிழ் சமூகமானது இன்று பலவித இன்னல்களின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தின் சுழற்சியால் உலகமாயமாக்கல் பொறிமுறையின் தாக்கம் தமிழ்ப்பண்பாட்டின் அடிவேரை அரித்து - அழித்து வருகின்றது. தமிழ்மக்களின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார, பண்பாட்டியல் சார்ந்த கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கும் சிதைவுகளால் மீளமுடியாத சூழ்நிலைச் சகதிக்குள் எமது சமூகம் சிக்கித் தவிக்கின்றது. தற்காலத்தில் தமிழ் மக்களின் குடும்பக் கட்டமைப்பில் சிதைவு ஏற்பட்டுள்ளது. இலைமறைகாயாக பேணப்பட்டுவந்த ஒருவனுக்கு -ஒருத்தி என்ற வாழ்க்கை முறை, கூட்டுக் குடும்ப வாழ்வு, பெற்றோரை ஆசிரியரை கனம் பண்ணல் முதலிய பலவித உன்னதமான நடைமுறைகள் இன்று இல்லாமல் வழக்கொழிந்து போய்விட்டன. அத்துடன் தமிழ்ப்பண்பாட்டை சிதைக்கும் தென்னிந்திய சினிமாக்கள் மற்றும் சின்னத்திரைகளின் கட்டற்ற வரவுகள் சமூகத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் மேற்சொன்ன வெகுசன காண்பிய ஊடகங்களில் வரும் விரசங்களை தூண்டுகின்ற காட்சிகள், பேச்சுக்கள், ஆதிக்க வன்முறைகள், அடக்கு ஒடுக்கு முறைகள், பாலியல் வன்முறைகள், அதிகார வெறிகள், வன்முறை, குரோதங்களை வளர்க்கும் பேச்சுக்கள் போன்றவை மனித மனங்களை சின்னாபின்னமாக்கி வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்க விழுமியங்களை போதித்து அவர்களை எதிர்கால சிற்பிகளாக மிளிரச் செய்யும் வகையில் உன்னத பணியை மேற்கொள்வதில் கிராமங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்கள் (சன சமுக நிலையங்கள்) ஆர்வம்காட்ட வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் முன்னெப்போதுமில்லாதவாறு மது, போதைப்பொருட் பாவனைகள் தலை தூக்கியிருக்கின்றன. அதுவும் வடபுலத்தைப் பொறுத்தவரையில் இவற்றின் தாக்க வேகம் சொல்லும் தரமன்று. வயது வேறுபாடின்றி இவற்றிற்கு அடிமையாவோர் தொகையும் அதிகரித்து வருகின்றமையானது சமூகத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக மாற்றியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே இங்கு அரங்கேறி வருகின்ற வன்முறைச் செயற்பாடுகள், குழு மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள் குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் போன்ற சமூகவிரோத செயற்பாடுகளை நோக்க முடியும். இவ்வாறான காடைத்தனமான செயற்பாடுகளைக் குறைக்க -கட்டுப்படுத்த முடியாதா? என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் மன ஆதங்கமும் கூட. தரமான மனிதர்கள் இல்லாமல் தரமான சமூகத்தை உருவாக்கிட முடியாது. தற்போதைய சூழலில் சமூகப்பிரக்ஞையுடையவர்களைக் காண்பது அரிதாகவுள்ளது. இதனால் சமூக மட்ட அமைப்புக்களில் அங்கம் வகிப்பவர்கள் தொகை வீழ்ச்சியடைந்து செல்வதனை குறிப்பாக இளையோர் இத்தகையவாறான அமைப்புகளில் இணைவதில் பின்னடிக்கின்றமையையும் காணமுடிகின்றது. இத்தகைய நிலைமையை சன சமுக நிலையங்கள் மாற்ற வேண்டியது அவசியம். இதற்காக சமூகத்தின் தேவையறிந்து பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை கல்வியியலாளர்களின் பங்கேற்புடன் அமுலாக்கம் செய்கின்றபோது எதிர்காலத்தில் நற் சமூத்தின் முகிழ்ப்பானது சாத்தியப்படும்.