யாழ்ப்பாணத்தின் சைவத்தின் தொன்மத்தை உலகிற்கு உரக்கச்சொல்லி நிற்பதில் காத்திரமான பங்கினை வகிப்பதில் ஆலயங்கள் முதன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன. ஈழத்தில் சைவம் வாழ்கின்றது என்பதற்கு சாட்சியாக ஆலயங்களுடன் மக்களின் வாழ்வியல்முறை பிணைக்கப்பட்டிருப்பதனைக் குறிப்பிட முடியும். தாய்த்தமிழகத்தைப் பொறுத்தவரை ஆலயங்களின் எழுச்சி மட்டுமன்றி; பக்தியிலக்கியங்களின் தோற்றமும் சைவத்தின் மேன்மையை அடையாளப்படுத்துவனவாக அமைகின்றன. ஆனால் ஈழத்தில், பக்தியிலக்கியங்கள் அல்லது இந்துசமயம் சார்ந்த நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவிற்கு தோற்றம் பெறவில்லையென்றே கூற வேண்டும். இருந்தபோதிலும், ஆலயங்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமேயில்லை எனுமளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் மூலை முடக்கெங்கும் ஆலயங்களின் இருப்பை தரிசிக்கலாம். இதனால்தான் கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழியும் வழக்கத்திற்கு வந்திருக்கிறது போலும். இதிலிருந்து ஆலயங்கள் மக்களின் வழிபாட்டுடன்- வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றமை பற்றி அறியமுடியும். அன்றைய காலத்தில் 'யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம்'; என்ற கருத்தியல் வலுப்பெறுவதற்கு ஆலயங்களை மையப்படுத்தியதான புராணபடனம் ஓதும் மரபானது தோற்றுவிக்கப்பட்டிருந்தது. சைவத்தின் காவலராக – மீட்பராக விளங்கிய ஆறுமுக நாவலரின் காலத்திலேயே புராணபடனம் ஓதும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக நல்லூரிலேயே இவ் வழக்கம் மேலுயர்ந்து காணப்பட்டது. நல்லைநகர் நாவலருக்கும் நல்லைக் கந்தனுக்குமிடையேயான உறவு மிகவும் இறுக்கமாக இருந்தது. அவரது ஆன்மிக அறப்பணிகள் பெரும்பாலும் நல்லூரை மையப்படுத்தியதாகவே காணப்பட்டன எனில் மிகையாகாது. நாவலரின் சமய மறுமலர்ச்சிக்கான விதை இங்கேதான் ஊன்றப்பட்டது என்பதனையும் மறுதலிக்க முடியாதளவிற்கு இவர் பணிகள் இவ்வாலயத்தைச் சுற்றியேயமைந்திருந்தன எனலாம்.
சிதம்பரநாதன் (வயது-75) - நான் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இங்க வந்து கும்பிடுறது வழக்கம். எனக்கு என்ன துன்பம் வந்தாலும் உடனே ஆறுமுக சுவாமி வாசலிலிருந்து அவனை நினைந்துருகி வழிபடுவேன். இதனால் வந்த துயரனைத்தும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஓடிவிடும். அந்தளவிற்கு நல்லூரான் மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கிறான். ஏன்? யாழ்ப்பாணத்தில எவ்வளவு கோயில்கள் இருக்கு? ஆனால் இப்ப அங்க நடக்கின்ற கோயில் திருவிழாக்களுக்கு சனங்கள் போறது ரொம்ப குறைஞ்சு வருகுது தம்பி! சுவாமி காவுறத்திற்கே ஆட்களைப்பிடிக்கிறதெண்டால் பெரும்பாடாகத்தான் இருக்கு. காலப்போக்கில், சாமி காவ சம்பளத்திற்கு கூட ஆக்களைப்பிடிச்சாலும் ஆச்சரியப்பட ஒண்டுமில்லை. அந்தளவிற்கு இப்பவெல்லாம் கோயில்களுக்கு மக்கள்; போறதே வலு குறைவெண்டதால கட்டாயப்படுத்தி ஆக்களை கூப்பிட்டெல்லோ இப்ப சாமி காவுறாங்கள். ஆனால், இஞ்ச எத்தனை சனக் கூட்டங்கள் குவியுதெண்டு பார்! சாமிகாவவே எவ்வளவு போட்டியாக் கிடக்கு? இதுக்கெல்லாம் இக் கோயிலில் எவ்வளவு சக்தியிருக்கெண்டு தெரியுது தானே! இந்த மண், செல்லப்பர், யோகர் முதலிய சித்த புருசர்கள் நடமாடிய புனிதமான மண்ணல்லவா? தேரடியருகில் நிற்கின்ற வில்வமரத்தின் கீழிருந்துதான் யோகர் சுவாமிகள் தவம் செய்தவர். செல்லப்பரும் கூட இதன் அருகில்தான் இருந்து தியானம் செய்தவராம். பல நூறு வருடங்கள் கழிந்தபோதும் எத்தனை புயல்கள், கடும் மழைகள், வெள்ளங்கள் என இயற்கையழிவுகள் வந்தன. இருந்தும் எந்த இயற்கை இடருக்கும் அசராமல் மிடுக்குடன் நிற்கின்றது பார். இப்பவும் கூட, இந்த வில்வமரத்தின் கீழ் இருக்கும் போது ஒருவித இனம்புரியாத பேர்அமைதி, உள்ளுணர்வு ஏற்படும்;. இதனால்தான் பலர் இம்மரத்தடியிலிருந்து சிவயோக சுவாமிகளது நற்சிந்தனைகள், கந்தபுராணம் படித்தல், திருமுறை ஓதுதல் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களைச் சுறியுள்ள கஸ்ரங்கள், துன்பங்கள் எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் அவையெல்லாம் காணாமல் போய்விடும். இவையெல்லாம் நான் கண்டுணர்ந்த உண்மைகள்தாம். எனத் தொடர்ந்தார்.
சகாதேவன் (வயது 72) - எனக்கும் இந்த நல்லூரானுக்கும் இடையே என்ன வாலாயமோ தெரியாது. பொழுது விடிஞ்சா நல்லூர்க் கந்தனை நோக்கி என்னை இழுத்துப்போடும். அந்தளவிற்கு எனக்கும் அவனுக்குமிடையே இனம்புரியாத உறவு ஆழமா இருக்கு. எமது பிரதேசத்தைப் பொறுத்தவரை ஏராளமான கோயில்கள் இருக்கு காலப்போக்கில ஆலய நடைமுறைகளை பக்தர்களின் வசதிகளுக்கேற்ப ஆலய நிர்வாகங்கள் தளர்த்துகினம். ஆனால் இக் கோயிலில் ஆரம்ப காலம் முதலே, நான் சிறுவனாக இருந்த போதிருந்த பல நடைமுறைகள் மாறாமல் அப்படியே இருக்கு. உதாரணங்களுக்கு சிலவற்றை சொல்லுறன். அதாவது ஆண்கள் மேலங்கியணிந்து ஆலய உடபிரகாரத்தினுள் செல்லமுடியது என்ற நடைமுறை இறுக்கமாக பேணப்பட்டு வருகிறது. எந்த நாட்டுத் தலைவர்கள் வந்தாலும் மேலங்கியை கழற்றியே செல்ல வேண்டும். ஏன் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதிகள் பிரதமர்கள் கூட மேலங்கியை கழற்றிவிட்டே உள்ளே சென்ற, செல்கின்ற வரலாறுகளை நாம் பார்க்கிறோமல்லவா? இதில பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் ஆலய நிர்வாகம் இந்த நடைமுறையை ஒருபோதும் தளர்தவில்லை. இதில விஞ்ஞான பூர்வமான அறிவியலும் ஒளிஞ்சிருக்கு கண்டியளே! என்னென்டால் கர்ப்பக்கிரகத்திலிருந்து அதிகளவு சக்தி ஓட்டங்கள், அதிர்வுகள் வெளிவருகின்றனவாம். மணியோசைகளிலிருந்து கிளம்பும் அதிர்வுகள் வேற. இப்படியான அதிர்வுகள் நமது உடலுள் கடத்தப்படுவதால எமக்கு பலவித நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அடுத்தவிடயம், அர்ச்சனைக்கு ஒரு ரூபா அறவிடப்படுவதைக் குறிப்பிடலாம். இதனால் ஏழை எளிய மக்கள் கூ;ட அர்ச்சனை செய்யக்கூடிய வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதமட்டுமன்றி ஏனைய அபிசேகங்களுக்கும் அதாவது உருத்திரா அபிசேகம், சண்முக அபிசேகம் மற்றும் திருவிழாக்கள் முதலியவற்றிற்கும் பதிவுக்கட்டணங்கள் ஆரம்ப காலத்திலுள்ள கட்டண அளவாகவே காணப்படுகிறன. அதைவிட முக்கியமான விசயம் என்னவெண்டால் பூசை நேரகால ஒழுங்குகள் இறுக்கமாக பேணப்படுகின்றமையாகும். இது ஏனைய கோயில்களிலில்லாத விசேட நடைமுறையாகும். நாளாந்தம் நடைபெறும் நித்திய பூசைகள், அபிசேகங்கள் முதல் திருவிழாக் காலங்களில் நடைபெறும் நைமித்திய பூசைகள், கிரியைகள் மற்றும் சாமி வெளிவீதி வலம் வரும் நிகழ்வுகளில் கூட ஓழுங்கமைக்கப்பட்ட நேர முகாமையின் படிதான் நடைபெற்றுவருவது அன்று தொட்டு இன்றுவரை இருக்கும் வழமையாகும். இவ்வாறாக பலவிதமான பாரம்பரிய நடைமுறைகள் தற்போதும் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு வருவதானால் தான் இக்கோயிலின் தனித்துவம் பன்மடங்கு உயர்வதற்கு காரணங்களாக அமைகின்றன என்பதே எனது தாழ்மையான கருத்து. என்று நல்லூரின்கண் பின்பற்றப்பட்டு வருகின்ற பழையகால நடைமுறைகள் பலவற்றினை அவர் அடுக்கிக் கூறினார். இருப்பினும் இவர் கூறிய அனைத்து விடயங்களும் இடத்தின் அளவுகருதி வெட்டியும் சுருக்கியும் தரப்பட்டிருக்கின்றன.
கருணாகரன் (வயது 70) - இவர் தொன்றுதொட்டு பஜனை மூலம் பண்ணொடு இசைப்பாக்களை ஓதிவருபவர். இவரது பண்ணிசைக்கலை மூலமான ஆன்மிகப்பணியை இங்கு நடைபெறுகின்ற விசேட உற்சவங்களில் காணமுடியும். இவரது கருத்துகள் அனைத்தும் கலைகளைத் தழுவியதாகவே அமைந்துள்ளன. அவர் கூறிய கருத்துக்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. கலைகளின் ஒட்டுமொத்த வடிவமாக ஆலயங்கள் விளங்குகின்றன. இந்துசமய வழக்கில் கலைகள் 64 ஆக உள்ளன என குறிப்பிடப்படுகின்றது. இக்கலைகள், ஆலயங்களை மையமாகக் கொண்டே எழுச்சிபெற்றன. நல்லூரைப் பொறுத்தவரை இசை, நடனம், கட்டடம், சிற்பம் ஓவியம் முதலிய பல்வேறு கலைப்படிமங்களை தரிசிக்க கூடியதாகவிருக்கிறது. திருமுறை, பஜனைகள் பாடுதல், மங்கள வாத்தியங்களின் இசைகள், மற்றும் திருக்கார்த்திகை உற்சவத்தின் போது மாலைவேளையில ஆலய உட்பிரகாரத்தில் பல்வேறு வாத்தியக் கலைஞர்கள் ஒருமித்து இசைக்கிற பல்லிய இசை என்பவை இசைக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதனைக் காட்டுகிறது. நடனக் கலைக்கு, அந்தக் காலத்தில் சாமி வெளி வீதிவருகையில் கரகாட்டம், கும்மி போன்றவை தனியிடம் பெற்றன. அத்துடன் நடராஜரின் 108 தாண்டவங்களும் புராண, இதிகாசக் கதைகளும் உட்சுவரில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கட்டடக்கலைக்கு ஆலய முகவாயில் கோபுரம், சண்முகவாசல் நவதள கோபுரம், குபேரவாசல் பஞ்சதள கோபுரம் முதலிய மூன்று கோபுரங்களும், சிற்பக்கலைக்கு அக் கோபுரங்களில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் சாமி சிலைகள், வாகனங்களிலுள்ள சிற்பங்கள் போன்றவை முக்கியமானவையாகும். ஆலய உட்சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் கோபுரங்களிலுள்ள சிற்பங்கள் என்பவை ஆழ்ந்த பொருட்தத்துவத்தை எமக்கு வெளிப்படுத்தி நிற்பவையாகும். அவற்றை இன்றைய இளஞ்சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மேலும், இரவு வேளைகளில் ஆலய வெளிவீதியைச் சுற்றியுள்ள மண்டபங்களில் நடைபெறும் கர்நாடக இசைக் கச்சேரிகள், வாத்தியக் கச்சேரிகள், வில்லிசை, பரதநாட்டிய நிகழ்வுகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்கள் என்பவையும் கலைகளின் உறைவிடமாக ஆலயங்கள் திகழ்கின்றன என்பதற்கு நல்லூரே சாட்சியாகின்றது. தற்காலத்தில் மக்களின் ஆன்மிக நாட்டங்கள் வெகுவாக குறைவடைந்து வருகின்றன. எனவே கலைகளின் மூலம் ஆன்மிக உணர்வை, இறை சிந்தனையை, ஒழுக்க விழுமியங்களை இன்றைய இளையோர் மனங்களில விதைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இன்று ஏனைய கிராமங்களிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில இளையோர்களின்ர தொகை வீழ்ச்சியடைந்து வருவதனைப் பார்க்கிறோம். ஆனால் நல்லூர் கந்தசாமி ஆலயம் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்றுதான் கூறவேண்டும். அதிகமான இளைஞர், யுவதிகள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள். பிரதட்டை செய்தல், அடியழித்தல், காவடியெடுத்தல் போன்ற செயற்பாடுகளில இளையோர்கள் தான் அதிகம் ஈடுபட்டு வருவதனைக் காணமுடிகின்றது. அறநெறிப்பாடசாலைகளில் கல்வி பயிலும் இளம் பிள்ளைகளும் ஆலய வெளிப்பிரகாரங்களில் நடைபெறுகின்ற கலை நிகழ்வுகளிலும் கூட்டுப்பிரார்த்தனைகளிலும் பங்குகொள்கின்றனர். ஆக மொத்தத்தில், கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் சிறப்பான இடத்தினை இக்கோயில் வழங்கி வருகிறதுடன் ஆன்மிக நாட்டத்தையும் கூட்டுணர்வையும் ஆளுமைப் பண்புகளையும் இளையோரிடத்தில் வளர்க்கின்றன. என்று அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
இவர்களைப்போல எத்தiனையோ கோடி பக்தர்களின் மனங்களிலே நல்லைக்கந்தன் நீக்கமற நிறைந்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறான். அவர்களது மனப்பதிவுகளையெல்லாம் இங்கே குறிப்பிடுவதென்பது இயலாத காரியம். இருந்தும் மேலே விவரித்திருக்கின்ற ஓரிருவரின் கருத்துக்களும் அத்தனை கோடி பக்தர்களின் மன உணர்வுகளை ஓரளவுக்கேனும் பிரதிபலித்திருக்கும் என நம்பலாம். நமது ஈழமணித்திரு நாட்டைப்பொறுத்தவரை அழியாச்சிறப்புடைய நல்லூர் கந்தன் ஆலயத்தின் தொன்றுதொட்டுவருகின்ற வழக்காறுகள் பல தசாப்தங்கள் கடந்தாலும் வழமை மாறாது இறுக்கமாக கடைப்படிக்கப்பட்டுவருவதானது ஏனைய ஆலயங்களிலிருந்து இவ்வாலயம் வேறுபட்டு தனித்துவமாக நிற்பதற்குரிய முகாந்திரமாக அமைகின்றது. அதுமாத்திரமன்றி, இலங்கையின் மூவின மக்கள் மட்டுமல்லாமல் தேசங்கடந்தும் வேற்றின மக்களும் இன, மத பேதமின்றி வழிபாடாற்றும் பாங்கும் மெச்சத்தக்கது. இத்துணை சிறப்புக்களையெல்லாம் ஒருங்கே கொண்டிலங்கும் யாழ் நகரத்தின் நடுநாயகமாக பொலிந்து விளங்கும் நல்லைக்கந்தனின் திருவருட்கோலம் காண்பதற்கு நாம் என்ன புண்ணியம் செய்தோமோ? என எண்ணத்தோன்றுகின்றது.
ஸ்ரீராம்குமார் நதிபரன்