மானிட வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும் யோகக்கலை உணர்த்திநிற்கும் வாழ்வியற் கூறுகள்.


இந்துமதத்தின் ஊற்றுக்கண்களாகவும்; மனித வாழ்வியலை வளம்படுத்துகின்றனவாகவும் விளங்கும் இந்தியப்பெருங்கலை வடிவங்களுள் ஒன்றாகத்திகழும் யோகக்கலைக்கு காத்திரமான பங்குண்டு. மனிதப்பிறவியெடுத்த நாம், சாதாரண மனிதநிலையில் வாழமுற்படாது கடைநிலையான விலங்குநிலையிலே வாழ்ந்து வருகிறோம். இவ்விருநிலைகளையும் தாண்டி உயர்ந்த நிலையாகிய தெய்வீக நிலைக்குயர்த்தும் புனிதத்தன்மை வாய்ந்த கலையாக யோகக்கலை மிளிர்கின்றது. மனிதர்களிடத்தில் இயல்பாகவே உள்ள மனித குணங்களுடன் கீழான மிருக குணங்களும் மேலான தெய்வீக குணங்களும் இரண்டறக் கலந்துள்ளன. ஒருவனிடத்தில் மனித குணங்களுடன் மிருக குணங்கள் மிகுகையில் அவன் அசுரத்தனமாக, மிருகங்கள் போல் நடந்துகொள்கிறான். அதேசமயம்; தெய்வீக குணங்கள் அதிகமாகும் போது அவன் புனிதனாக உயர்ந்த வாழ்க்கையை வாழத்தலைப்படுகிறான். இக்கருத்தை வலியுறுத்துவதாகவே மனிதனுக்குள் இருக்கக்கூடியதான முக்குணங்கள் பற்றி (ராஜசம்-மிருககுணம், தாமசம் -மனிதகுணம், சத்துவம்-தெய்வீககுணம்) இந்துமதம் எடுத்தியம்புகின்றது. மனிதன் இயற்கையின் அங்கம் என்பதால், இயற்கைகூட முக்குணங்களாலானதும் ஆளப்படுவதுமாகும். மேற்கூறப்பட்ட முக்குணங்கள் மனிதனுக்கிருக்கும் குணங்களை மட்டும் குறிப்பதல்ல. அதற்குமப்பால் பிரபஞ்சத்தின் பன்முகப்பட்ட படைப்புகள் தோன்றுவதற்கும் நிலைபெறுவதற்கும் அடிப்படையானவையாகும். இவற்றாலேயே கூர்ப்பும் நடைபெறுகிறது. கூர்ப்பு என்பது படைப்பும், அதுசார்ந்த தொடர்ச்சியான விருத்தி நிலைகளும், ஆளுமையும், உடல், மனம், பிராணன் என்பவற்றின் சேர்க்கையுமாகும். இவற்றுக்கிடையிலான ஒருங்கிசைவற்ற தன்மைகள் ஏற்படுகையில், மனிதன் முக்குணங்களின் பிடியில் சிக்கி அல்லலுறுவதுடன் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கும் இடர்களுக்கும் நோய்களுக்கும் முகங்கொடுக்கின்றான். யோகசாதனையே இவற்றின் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்கும் கருவியாக அமைகின்றது. எனவேதான், உயர்தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு உயர்தரமான கருவியொன்று தேவை. அதுவே யோகம் என்பதாக அமைகின்றது. இதன் பின்னணியிலிருந்துதான் இந்துப்பண்பாட்டுப் பாரம்பரியங்களும் பொதுமைப்பாடுடைய நடத்தைசார் வாழ்வியல் விழுமியங்களும் எழுச்சிபெற்றன எனக் கொள்ளலாம்.

       கால, தேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் இக்கலையின் சிறப்புக்கூறுகள் பற்றி நோக்குமுன், யோகம் என்ற விடயப்பரப்புப்பற்றி பூர்வாங்கமாக நோக்குவோம். பொதுவாக யோகமானது ஆழ்ந்த பொருட்தத்துவத்தை எமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. 'யுஜ்'எனும் வினையடியினின்று பிறந்த இச்சொற்பதம் குறித்து நிற்கும் பொருளை நோக்கின், 'இணைத்தல்'அல்லது'ஒன்றுசேர்த்தல்'என்ற நேரடி அர்த்தம் கொண்டு, நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று முக்கிய பொருட்களையும் ஒன்றிணைத்து மனித வாழ்வியற் சமன்பாட்டிற்கு வித்திடு;ம் அறிவியற்கலையாக விளங்குகிறது. இதனை இன்னொருவிதமாகக் கூறும்போது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான ஓழுக்க நெறிகளை–வாழ்வியல் ரீதியான விடயங்களை போதிக்கும் துறை இதுவாகும். இறைவனால் மனிதனின் ஆன்ம ஈடேற்றம் கருதி அளிக்கப்பெற்ற அரும்பெரும் பொக்கிசமான இக்கலையைச் சூத்திரவடிவில் முதலில் தொகுத்தளித்த பெருமை யோகி பதஞ்சலி மாமுனிவரையே சாரும். இவரே பின்னாளில் யோகத்தின் தந்தையாக போற்றிச் சிறப்பிக்கப்படுகிறார். 

சித்தத்தை செம்மைப்படுத்தும் போதே வாழ்க்கையானது சிறக்கின்றது- பூரணத்துவமடைகின்றது. வாழ்க்கை மேம்பாடடைவதற்கு இடைவிடாத யோகப்பயிற்சிகளே பெரிதும் உதவுகின்றன என இந்துசமய நூல்களில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. 'சித்தமலம் அறுவித்து சிவமாக்கியெனையாண்ட அத்தன்...'என்ற திருவாசக அடிகள் மூலம் மாணிக்கவாசகர், சித்தத்தை செம்மைப்படுத்தும் போது சிவப்பேற்றை அடைய முடியும் என்கிறார். மேலும் 'சித்தவிருத்தி நிரோதக...'என்பது யோகத்தின் அடிப்படைக் கருத்தியல். இதனை யோகக்கலையின் தந்தையாக விளங்கும் பதஞ்சலி மாமுனிவர் கூட தனது யோக சூத்திரத்தில் வலியுறுத்திக் கூறுகிறார். யோகம் சித்த விருத்திகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது. அதாவது சித்தம் என்பது எண்ணங்களின் ஃ சிந்தனைகளின் ஒட்டுமொத்த இருப்பிடமாகும். இது பல நிலைகளில் பலவாறு செயற்படும் தன்மையது. நான் -எனது எனும் அகங்கார, மமகாரங்களும் சேர்ந்தியங்கும் முனைப்புறு தன்மையே சித்தமாகும். இதுவே மனித வாழ்வைச் சீர்ப்படுத்தவும் சீரழிக்கவும் காரணமாகிறது. துன்பம், விரக்தி, வெறுப்பு, கவலை போன்ற பல விரும்பத்தகாத எதிர்மறையான விளைவுகளுக்கும் மகிழ்வு, இன்பம், வெற்றி, களிப்பு முதலிய பல விரும்பப்படுகின்ற நேர்மறையான சம்பவங்களுக்கெல்லாம் காரணம் மனமாகும். எனவே முதலில் ஐம்புலன்களிடமிருந்தும் மனதை பிரித்தெடுத்து எதுவும் நிலையற்றது என்ற யதார்த்தத்தை உணர்ந்து மெய்யெது? பொய்யெது? என்றாய்ந்துணரும் வேளை மனதை எண்ணங்களற்றதாக்குவது மிக எளிது. எனவே நமது மனதில் பதிந்துள்ள எண்ணங்களின் முழுத் தொகுதிகளின் ஒட்டுமொத்த எழுச்சி நிலைகளே சித்த விருத்தியாகும். அவற்றை மனதினின்றும் அழித்தலே சித்த விருத்தி நிரோதக... என்பதன் பொருள் விளக்கமாகும். இதிலிருந்து யோகக்கலையானது சித்தத்தை செம்மைப்படுத்துவதற்கான பல்வேறு வாழ்வியல் அம்சங்களையும் தத்துவங்களையும் தன்னகத்தேகொண்டு விளங்குகின்றதெனலாம்.


யோகமானது, கோட்பாட்டு ரீதியில் - பிரயோக அடிப்படையில் நான்கு பெரும் பகுதிகளாக பிரித்து நோக்கப்படுகின்றது. அவையாவன கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், இராஜயோகம் என்பனவாகும். இவற்றைப்பிரயோகிக்கும் வழிமுறைகள் வௌ;வேறானவையாகினும் அவற்றின் இறுதி இலக்கு ஒன்றே. அதாவது உண்மைத்தன்மையை- பூரணத்துவத்தை அறிந்து கொள்வதேயாகும். இங்கு உடலையும் மனதினையும் மையப்படுத்திய யோகத்தை இராஜயோக முறைக்குள்ளடக்கப்படுகிறது. யோகக்கலையின் தந்தையாக விளங்குகின்ற பதஞ்சலி மாமுனிவரின் 196 யோகசூத்திரங்களும் இராஜ யோகமுறைக்குள்ளேயே வருகின்றது.  பொதுவாக நோக்குமிடத்து சித்தர்கள், யோகிகள் கடைப்பிடித்த யோகமுறையானது பதஞ்சலிமா முனிவரால் யாக்கப்பெற்ற இராஜ யோக முறையை அடியொற்றியதாகும். இஃது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் கருவியாக தொழிற்படுகின்றது. அதாவது, ஆன்மா விடுதலையடைந்து பேரின்ப நிலையை எய்த வேண்டும் என்பதே இதன் பிரதான குறிக்கோளாகும். இது மனிதனது உடல், உள ,ஆத்மிக நலன்களை மேம்படுத்துவதில் தொடங்கி இறுதி இலட்சியமான மோட்ச நிலையையடைதலீறான வாழ்வியற் கோட்பாடுகளை படிமுறையாக விளக்குகின்றது.

   இராஜயோகம் வலியுறுத்துகின்ற முக்கிய விடயப்பரப்பாகிய அட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான வாழ்வியற் படிமுறைகள் காணப்படுகிறன. இது பற்றிய விளக்கத்தைச் மிகச் சுருக்கமாக நோக்கும் போது,

1. இயமம்- தீயவற்றை விட்டொழித்தல். (கொல்லாமை,பொய் கூறாமை,களவுசெய்யாமை,காமமின்மை)

2. நியமம்- நன்றாற்றல். (பிறருக்கு உதவுதல், பரோபகாரம், தூய்மையுடைமை,வாய்மை,தவம் புரிதல்)

3. ஆசனம்-இருக்கைநிலை. (உடல் நன்நிலையடைதலுக்கானஉடல்சார்ந்தபயிற்சிமுறைகளைசெய்தல்)

4. பிராணாயாமம்- சுவாசத்தை சீராக்கம் செய்தல். (பிராணனைதன்வயப்படுத்திஅடக்கியாளும் கலை)

5. பிரத்தியாகாரம்- ஐம்புலன்களையும் புறவுலகப் பொருட்களிலிருந்து விடுவித்து அகமுகமாகத் திருப்புதல்.

6. தாரணை- மனதை ஒருநிலைப்படுத்தல்.

7. தியானம்- மனதை கட்டுப்படுத்தி எடுத்துக்கொண்ட பொருள்மீதான உண்மைத் தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல், தெளிதல் நிலைதிரியா மனதினைப் பெறல்.

8. சமாதி- உணர்வொடுங்கிய நிலை. அதாவது இறைவனுக்குச் சமமான (மோட்ச) நிலை. என்பதாக யோகத்தின் எட்டு விதமான படிமுறைகளும் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடற்பாலது.


     அண்டத்திலிருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கிறது எனும் கருத்துருவே சித்தர்கள் வகுத்த யோகநெறியின் மையக்கருத்தியலாக அமைகிறது. அதாவது அண்டம் என்றால் உலகம் எனவும் பிண்டம் என்பது நமது உடல் எனவும் கொண்டு, அண்டமானது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கைகளாலானது. இதுபோலவே உடலிலும் ஐம்பூதங்களின் ஆதிக்கமானது நிலைபெற்றிருக்கிறது. இங்கு நிலம்- பரு உடல், நீர்- இரத்தம் மற்றும் சீல் போன்ற திரவம், தீ- உடல் வெப்பநிலை, காற்று- பிராணன் முதலிய தச வாயுக்கள், ஆகாயம் - மனம் போன்றவற்றைக் குறிப்பதாக அறியப்படுகிறது. இந்தப் பருவுடலானது மண்ணிலிருந்து தோன்றி உயிரடங்கப்பெறுகையில் ஈற்றில் மீண்டும் மண்ணுக்கே திரும்புகிறது. அதனால்தான் அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என யோகிகள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் மனித வாழ்வியல் இயற்கையுடன் பின்னப்பட்டிருக்கிறது என்ற விடயம் இழையோடியுள்ளது. இருப்பினும் தற்கால நவீனத்துவமானசூழலில் இயற்கையினின்றும் வழுவியதான- இயற்கையை விரோதிக்கும் வாழ்க்கைமுறையை வாழத்தலைப்பட்டதனாலேயே நமது வாழ்க்கையில் இத்துணை இடர்ப்பாடுகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இங்கு யோகமானது இயற்கையை ஆராதிக்கின்றது என்பதற்குச் சான்றாக 'சூரியநமஸ்க்காரம்' என்ற இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற பயிற்சிமுறையைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

    தற்போது வியாபார மாயைக்குள் அமிழ்ந்து வரும் இக்கலையை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக யோகத்துறைசார் நிபுணர்களைக்கொண்டு  உலக நாடுகளில் யோகப் பயிற்சி மையங்களை ஸ்தாபித்து திறமையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கி அவர்களைக் கொண்டு கிராமங்கள் தோறும் மக்களுக்கு பயிற்சியளிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது புனிதத்துவமான இக்கலையை பலர் வியாபாரமாக்கியும் மலினப்படுத்தியும் வருவது வேதனையளிக்கின்றது. பணமீட்டலுக்காகவும் புகழடைவதற்காகவும் இக்கலையை பயன்படுத்தி வருகின்றனர். அதுமாத்திரமன்றி பாரம்பரிய யோக முறைகளை புறம்தள்ளியும் தமது விருப்பிற்கேற்ப நவீன பயிற்சி முறைகளைப் புகுத்தியும் மக்களிடமிருந்து கச்சிதமாக பணங்கறக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. எனவே இக்கலையை களங்கப்படுத்துவோரிடமிருந்து நாம் விழிப்புடனிருத்தல் வேண்டும். மேலும் வருடந்தோறும் யோக ஆராய்ச்சி மாநாடுகளை நடத்துவதற்குரிய முன்னெடுப்புகளை மேற்கௌ;ள வேண்டும். அதற்கு துறைசார் வல்லுநர்களைக் அழைத்து நடத்;தி, அவர்களது சேவைகளுக்கான கௌரவங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் இம் மாநாடுகளின் போது பொருத்தமான ஆய்வுப்பரப்புகள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவ்வாய்வுக்கட்டுரைகளை தொகுத்து கனதியான வகையில் மாநாட்டு நினைவாக ஆய்வுமலராக வெளிக்கொணர்வதற்குரிய எத்தனங்களை ஏற்படுத்த வேண்டும்.


அடுத்த விடயமாக, பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை யோகத்தை ஒரு பாடமாக போதிப்பதற்கான நிலைமைகளை உருவாக்க வேண்டும். இதற்கமைய இலங்கை போன்ற நாடுகளில் கல்விச்சாலைகளில் இத்துறைக்கு அதிகளவு மாணவர்களை உள்வாங்குவதில் முனைப்புக்காட்ட வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இக்கலை பற்றியதான பிரக்ஞையை இளம் சந்ததிக்கு கடத்த முடியும். இதனால் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வெறுமனே உடற்பயிற்சி முறையாவே பார்க்கப்படும் இக்காலத்தில் அதனை உள்ளார்ந்த ரீதியாக, தத்துவ நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியமாகும். இக்கலை உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்களையும் நடைமுறைகளையும் அனைவரும் அறிந்து கொள்வதற்கான சூழமைவைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனொரு கட்டமாகவே கல்விச்சாலைகளில் யோகக்கலை வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி வழங்கி தரம் வாய்ந்த யோகப் பயிற்சியாளர்களை உருவாக்க முயல வேண்டும். எனவே பண்டைய மருத்துவ முறைகளுள் செலவில்லாத, முதன்மையான கலையாக திகழும் இக்கலை மீதான ஆர்வங்கள் தேடல்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் அதன் மகத்துவமும் உயர்வடைந்து வருவதனை காணகூடியதாக உள்ளது. ஒட்டுமொத்தமான அணுகுமுறையில் இதனை நோக்கின் தற்கால அறிவிலுக்கே சவால் விடக்கூடியளவிற்கு ஏராளமான வியக்கத்தக்க வாழ்வியல் அம்சங்களை, பயிற்சி நுட்பங்களை, நோய் குணப்படுத்தும் தன்மையை பயன்பாட்டு ரீதியிலும் தொழிற்பாட்டு ரீதியிலும் தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். பன்முகத்தன்மை வாய்ந்த ஆரோக்கியம் என்ற கருத்தியலின் அடிப்படையாக விளங்கும் இக்கலையை தற்கால விஞ்ஞான மருத்துவ முறைக்கு இணையாக நிலைபெறச்செய்து,மக்கள் முன் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் ஈடுபட்டுழைக்க வேண்டியது அவசியமாகும்.


    மனித வாழ்வியலின் பன்முகத்தளத்தில் ஒப்புயர்வற்றதாக விளங்கும் இக்கலையின் மகத்துவத்தை தற்காலத்தில் சர்வதேசம் நன்குணர்ந்திருக்கின்றது  என்பதனை நிதர்சனமாக்குவதாக உலகமக்களால் இன, மத, பேதம் கடந்து அனுசரிக்கப்பட்டு வருகின்ற சர்வதேச யோகா தினத்தைக்குறிப்பிடலாம். சமகாலத்தில் மேலைத்தேய நாடுகளைப்பொறுத்தவரையில் யோகக்கலையானது பரவலாக்கம் பெற்றுவருகின்றமையைக்காணலாம். ஆரம்பக்கல்வி நிறுவனங்களிலிருந்து உயர் பல்கலைக்கழகங்கள்வரை இக்கலைக்கு உயரியகௌரவம் வழங்கப்பட்டிருப்பது – வழங்கப்பட்டுவருவது இக்கலையின் பயனுறுதித்தன்மையை - சிறப்பினைப்பறைசாற்றி நிற்கிறது. தற்காலத்தில் உலகளாவிய ரீதியாக யோகப்பயிற்சி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகின்றமையும் அதனைகற்றுக்கொள்வதற்கான மக்கள் காட்டும் அதீத ஈடுபாடுகளும் ஆர்வங்களும் அதிகரித்து வருகின்றமையும் இக்கலைமீதான மக்களின் பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றது. காலமாற்றத்தால் மக்களின் நாளாந்த வாழ்வியல் கூறுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றநிலையில் இம்மாற்றங்களின் விளைவினால் அவர்களின் உடல், உள, சமூக, ஆன்மிக ரீதியிலான நிலைகளிலும் எதிர்மறையான தாக்கங்களும் முனைப்புற்று விளங்குகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமானது வளர்ச்சியடைந்து உச்சம் தொட்டு நின்றாலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாதளவிற்கும் மனித அரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும் அளவிற்கும் உடல், உளரீதியிலான நோய்களின் தாக்கங்களும் பல்வேறு வடிவங்களில் வேகமெடுத்து வருவதனையும் காணலாம். இவற்றுக்கான ஒட்டுமொத்த அணுகுமுறையாக - தீர்வாக நமது அன்றாடவாழ்வியல் நடவடிக்கைகளில் ஒன்றாக, யோகப்பயிற்சிமுறைகளைக்கைக்கொண்டால், எமது எதிர்காலவாழ்வு பிரகாசமானதாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே, இத்தகு மகத்துவம் மிக்க, மிகப்புராதன காலத்துக் கலையான யோகக் கலையினை இன்றளவிலும் புனிதங்கெடாமல் பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கும் கொண்டுசெல்ல வேண்டிய வரலாற்றுக்கடமையும் பொறுப்பும் நமக்கிருக்கின்றது என்பதனை நாம் நன்குணர்ந்து செயற்பட வேண்டும். இதனை நாம் செய்யத்தவறுவோமேயாக இருந்தால் மிகப்பெ ரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம் என்பது சர்வ நிச்சயம். 


ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர்)

Post a Comment

Previous Post Next Post