உலகில் நிகழும் பிறப்புகளில் மனிதப் பிறப்பானது காத்திரத்தன்மையானது. சாதாரணமாக மனித உடல், உளக் கூற்றியலை ஆய்வுக்குட்படுத்தினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமைப்பு, தோற்றம், வளர்ச்சி, மாற்றம், தேய்வு, மறைவு என்றவாறு வேறுபட்டிருப்பதனை அறிய முடியும். இவ்விகாரங்களை நுணித்தாய்வு செய்கையில் ஒவ்வொரு கணப்பொழுதும் அவை மாற்றமடைந்துகொண்டிருக்கின்றமையை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. அதுமாத்திரமன்றி கால, தேச, வர்த்தமானங்களுக்கேற்பவும் அடிப்படை அலகுகளில் கூட மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றமையும் கவனிக்கத்தக்கது. வாழ்வியலின் சீரான - தொடர்ச்சியான பயணிப்பிற்கு உடல், மனம், ஆன்மா (மூச்சு) ஆகிய மூன்றின் இயக்கப்பாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்ததன்மையுடையதாகவும் ஒருங்கிசைவானதாகவும் இருக்க வேண்டும். பொதுப்படையாக நோக்கினால், நாம், உடலியல் சார் அமைப்பு மற்றும் அதன்; இயக்கப்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள், பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை புரிந்துகொண்டு கருமமாற்றும் செயற்பாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உளக்கட்டமைப்பைப்பேணி, புரிந்து எதிர்வினையாற்றும் செயற்பாடுகளுக்கும் ஆன்ம ஈடேற்றத்திற்காக ஆன்மிகப் பண்புகளை பூண்டொழுகி உயிராற்றலை வளம்படுத்தும் பொறிமுறைகளுக்கும் கொடுப்பதில்லை என்கின்ற யதார்த்தமும் வெளிப்படையானது. மேலும், மனிதமனதின் இயக்கப்பாடுகள் பற்றிய ஆய்வுத்தளத்தில் மனவியல்சார் விடயங்கள் பற்றிய புரிதல்கள் உளவியல் வல்லுனர்களிடையே பலவித கருத்துநிலைகளை தோற்றுவித்தாலும் பொதுமைத்தன்மையான புலங்களில் ஒன்றுபடுவதை அவர்களது ஆய்வுப்பரப்புகள் வெளிப்படுத்தி நிற்பதனையும் நோக்கமுடியும். உடல் அமைப்பு அதன் செயற்பாடுகள் பற்றிய விஞ்ஞானரீதியான ஆய்வுகளில் மருத்துவவியல் துறைசார் புலமையாளர்களிடையே நிறுத்திட்டமான முடிவுகளில் ஒருங்கிசைவை அவதானிக்க முடிகின்ற அதேசமயம் உளம் பற்றியதான ஆய்வுப்பரப்பில் பல்வேறு விதமான முரண்நிலைகள், ஐயப்பாடுகள் காணப்படுகின்றமையானது மனம் என்ற எண்ணக்கருவானது ஆய்வுத்துறைகளுக்கு சவால் நிறைந்ததாக திகழ்கின்றது என்பது புலனாகும். எது எப்படியென்றாலும் உடல், உளச் சமநிலை பேணல், வாழ்க்கையின் பேண்தகு நிலைக்குமட்டுமல்ல ஆத்மிக ரீதியிலான பண்பியல்களின் உயர்ச்சிக்கும் அத்திபாரமாகும் என்ற அன்றைய மெஞ்ஞானிகளான யோகிகள், சித்தர் பெருமக்களின் அடிப்படைக் கோட்பாட்டு நெறிமுறைகளுடன் இன்றைய விஞ்ஞானிகளது கருத்தியல்களும்; ஒத்துப்போகின்றமையை அவதானிக்கலாம்.
எமது உடலானது அமைப்பு ரீதியாக ஒன்பது மண்டலங்களாக - தொகுதிகளாக(Systems) பிரிக்கப்படுகின்ற அதேவேளை, தொழிற்பாட்டு ரீதியிலும்; இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இடைத்தொடர்புள்ளவையாகவும் காணப்படுகின்றன. அவை, இரத்த ஓட்டமண்டலம்(Circulatory System), சமிபாட்டு மண்டலம்(Digestive System), இனப்பெருக்க மண்டலம்(Reproductive System), அகஞ்சுரக்கும் மண்டலம்(Endocrine System), சுவாசமண்டலம்(Respiratory System), நிணநீர் மண்டலம்(Lymphatic System), கழிவகற்றும் மண்டலம்(Excretory System), நரம்புமண்டலம்(Nervous System) மற்றும் எலும்புதசை மண்டலம்(Musculoskeletal System) என்றவாறாக ஒன்பது பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதான உடலில் தலையாயதாக ஐந்து உறுப்புக்கள் காத்திரத்தன்மை பொருந்தியவையாக விளங்குகின்றன. மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல்கள் மற்றும் சிறுநீரகங்கள்; என்பவையே அவையாகும். ஏனையவை துணை உறுப்புகளாக அமைகின்றன. இங்கு உடலியற்செயற்பாடானது சங்கிலித்தொடர் போன்றது. ஒரு மண்டலத்திலோ அல்லது ஏதேனும் உறுப்பு ஒன்றிலோ ஏற்படும் பாதிப்பு ஏனையவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவையாகும். மேலும் உடலியக்கப்பாட்டில் மனவியற்கோலங்களும் முதன்மைபெற்றிருப்பதனை ஆய்வுக்குட்படுத்தும் போது, மனதின் செல்;நெறிக்கேற்பவே மூளையும் அதனுடன் தொடர்புடையதான நரம்புத்தொகுதிகளும் இயங்குவதுடன் அவற்றின் கட்டளைக்கேற்ப நாளமில்லாச்சுரப்பிகளும் தூண்டப்பட்டு நொதியங்களை சுரக்கின்றன. இவற்றின் துணையோடுதான் அங்கங்களும் அதனோடு பின்னிப்பிணைந்துள்ள தொகுதிகளும் இயங்குகின்றன என்பதை அறிய முடியும். மனதிலிருந்து மேற்கிளம்புகின்ற கவலைகள், கோபங்கள், பேராசைகள், அதீத பயங்கள், பதட்டங்கள், மனஅழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் என்பவை உடலியற்றொழிற்பாட்டில் நேரடித்தாக்கம் செலுத்துகின்றன. இதனால் உடலியக்கப்பாடுகள் பாதிப்படைவதுடன் ஈற்றில் நோய்களாக பரிணமித்து வாழ்வியற்சமநிலையை சீர்குலைக்கின்றன. எனவே இயன்றவரை மனதினை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதை உறுதிப்படுத்தும் போது உடற்பிணிகள் இலகுவில் நம்மை நெருங்கமாட்டா. இதன்மூலம் நேர்விகிதசமனான நிலையில் மனவியல் சார் பாதிப்புக்களானவை உடலியற்பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை அதாவது உளத் தொழிற்பாடே உடலியற்தொழிற்பாட்டையும் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது என்பதுடன் யோகத்தில் வகுத்துரைக்கப்பட்டுள்ள மனரீதியான அடிப்படை (தியானம்) பயிற்சிகள் மூலம் உடலியற்றொழிற்பாட்டை சீரமைக்கலாம் என்ற விடயமும் இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும்.
தற்கால கூ10ழ்நிலையில் உளநெருக்கீடுகள், மனஅழுத்தம், பதகளிப்பு போன்ற உளப்பாதிப்புகளால் பாதிக்கப்படுவோர் அதிகரித்துவருகின்றமை அவதானிக்கத்தக்கது. இதற்கான முக்கிய காரணம், நமது வாழ்வியல் கோலங்களில் ஏற்பட்ட மாற்றங்களேயாம். உளப்பாதிப்புக்களானவை பல்வேறு மாற்றற்கடினமான பாரிய உளநோய்களையும் அதன் வழியாக உடற்பாதிப்புகளையும் ஏற்படுத்துவதுடன் ஆயுளையும் அற்பமாக்கிவிடுகின்றன. மனமானது அமைதியற்று - கிளர்ச்சி நிலையிலிருக்கையில் மனதில் எண்ண அலைகள் அதிகரித்து, சுவாச வேகம் கூடும் அதேவேளையில் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். இதனால் உடலில் பல்வேறு வேதியல் மாற்றங்களும் கட்டவிழ்கின்றன. அதாவது அதிரீனலின், கோர்டிசோல் முதலிய சுரப்புக்கள் அதிகரிக்கையில் இதயக்கோளாறுகள், நரம்புதளர்ச்சி, சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு உடலியக்கங்கள் தடைப்பட்டு மாரடைப்பு, பாரிசவாதம், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களை வரவழைத்து மரணம்கூட சம்பவிக்கும் அபாய நிலையுமுண்டு. அதுமாத்திரமல்லாமல் செரட்டோனின், டோப்பமைன், என்டோபின், ஒக்சிடோசின் போன்ற பலவித உயிர் வேதிப்பொருட்கள் நரம்பியற்கடத்திகளாக உடலில் தொழிற்படுகின்றன. இவை சமிபாடு, நித்திரை, அனுசேபத்தொழிற்பாடுகள் மற்றும் வாழ்வியல் ஊக்கம், சந்தோசம், சுறுசுறுப்பு, படைப்பாற்றல் முதலிய எண்ணற்ற பணிகளுக்கு முத்தாய்ப்பாக விளங்குகின்றன. இவற்றின் தொழிற்பாடுகளில் பாதிப்புகள் -தடைகள் ஏற்படும்போதுதான் மேற்கூறப்பட்ட பணிகள் - இயக்கங்கள் எல்லாம் தலைகீழாக மாறுவதுடன் உடற்சீரமைப்புத் தொழிற்பாடுகளும் பாதிப்படைகின்றன. இதற்காக மனதினை அமைதியான - சாந்தமான நிலையில் வைத்திருக்கும்போது இவற்றின் தொழிற்பாடுகளனைத்தும் செவ்வனே ஆற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. யோகப்பயிற்சிகள் மூலம் சுவாசத்தை தீர்க்கமானதாக, ஆழமானதாக மாற்றுகின்றபோது எண்ண அலைச்சுழல் குறைவடைந்து தெளிவான - அமைதியான - சஞ்சலமற்ற மனநிலையை உருவாக்கலாம்.. இங்கு யோகம் என்பதன் விளக்கம் மற்றும் அதன் படிமுறைகள், அவை எவ்விதமாக உடல், உளக் கட்டமைப்பை பேணுகின்றன? என்பதை கீழ்வரும் பத்தி வெளிப்படுத்துகின்றது.
யோகம் என்பது நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று முக்கிய பொருட்களின் இயக்கப்பாடுகளையும் ஒன்றிணைத்து மனித வாழ்வியற் சமன்பாட்டிற்கு வித்திடும் அறிவியற்கலையாகும். இதனை இன்னொருவிதமாகக் கூறும்போது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான ஓழுக்கநெறிகளை- வாழ்வியல் ரீதியான விடயங்களை போதிக்கும் துறை இதுவாகும். இராஜயோகம் வலியுறுத்துகின்ற விடயப்பரப்பிலுள்ள அட்டாங்கயோகம் என்ற எட்டுவகையான உட்பிரிவுகளுள் இயமம், நியமம் ஆகியவை சாதகனொருவன் தன் வாழ்க்கையில்; கைக்கொள்ளவேண்டிய அகப்புற ஒழுக்க விழுமியங்களை ஒழுங்குறக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் மூன்றாவதாகிய ஆசனங்கள் (நிலைகள்) என்ற பகுதியானது உடற்றொழிற்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு உடற்பயிற்சி முறைகள் பற்றி குறிப்பிடுகின்றது. உடலின் உள்ளமைப்பை சீராக ஓம்பி பாதுகாக்கின்ற வழிவகைகளை அதாவது கலங்கள் முதற்கொண்டு அங்கங்கள், இழையங்கள், தொகுதிகள் வரையான உடல் உட்கட்டமைப்பின் சீரான இயங்கியல் தன்மையை உறுதிப்படுத்துகின்ற ஆசன வகைகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. நான்காவதாக, பிராணாயாமம் என்ற பகுதியானது சுவாசப் பயிற்சிகளுடாக, உடலிலுள்ள எல்லா மண்டலங்களுக்கும் தலையாயதாக விளங்குகின்ற சுவாச மண்டலத்தை சீராக பேணுவதுடன் ஏனைய மண்டலங்களையும் சீராக பேணலாம் என்பதை வலியுறுத்துகின்றது. இன்னொரு முக்கிய விடயம் யாதெனில் சுவாசத்திற்கும் மன இயக்கத்திற்கும் நெருக்கமான, நேர்க்கணியத் தொடர்புண்டு. சுவாசம் சீராக இயங்குகையில் மனமும் அமைதியடையும். சுவாச வேகம் கூடும்போது மனமும் கலவரமடைந்து பதட்டமடையும். இது தன்னெழுச்சி சார்ந்தது. இயல்பானது. இதிலிருந்து பிராணாயாமப் பயிற்சிகளானவை உடலியக்கத்திற்கு மட்டுமன்றி அதனூடாக மன இயக்கப்பாட்டிற்கும் உறுதுணையாக விளங்குகின்றதெனின் மிகையில்லை. அடுத்துவரும் மூன்று கட்டங்களான பிரத்தியாகாரம், தாரணை, தியானம் என்பவை மனம் சார்ந்த - மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகளுக்குரியதாகிய நிலைகளாக திகழ்கின்றன. ஆன்மாவின் இறுதி இலட்சியமான சமாதி என்பது ஆன்ம ஈடேற்றமாகிய மீண்டும் பிறவாத நிலையான முக்தி நிலையைக் குறிக்கின்றது.
மேற்கூறிய விடயங்களிலிருந்து மனித வாழ்க்கை பூரணத்துவ நிலையை பெறுவதற்கு எவ்விதமான ஒழுக்கவிழுமியப் பண்புகள் பயிற்சி முறைகளையெல்லாம் பூண்டொழுக வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ள அட்டாங்க யோகப்படிமுறைகளுள்; இறுதி நிலையாகிய சமாதி நிலையை எய்துவதற்கு உடல்; அப்பியாசங்களைவிட கடினமான மனப்பயிற்சிகளே அதிக ஆதிக்கம் செலுத்துவதனை உணர முடியும். கடினமான மனப்பயிற்;சிகள் மூலம் மனதினை ஒருவன் சரியாக கையாழும் திறனைப்பெறின் ஈற்றில் மனதின் இயக்கம் நின்று எண்ணச் சுழலானது பூச்சிய - சூன்யநிலையை அடையும்போது அவனுக்கு இந்த பிரபஞ்சமே வசப்பட்டு அட்டமாசித்திகளும் கைவரப்பெற்ற ஞானியாவான் என்று யோக நூல்கள் சுட்டியுரைக்கின்றன. மேலும், சமகால வாழ்க்கையில் மனிதன் நோயில்லாது சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதென்பதே கானல் நீராகி வருகின்றது. இயற்கையை புறந்தள்ளி அதனை அழித்து வாழ முற்படாது, அதனோடிணைந்து - புரிந்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, முக்காலமும் அறிந்த சித்தர்கள், யோகிகளான நம் முன்னோர்கள் காட்டிய முறையான பாதையில் - யோக நெறியில் நமது வாழ்வியலைக்கட்டமைக்க தலைப்பட்டால் உடல், உளச் சமநிலை பேணப்பட்டு ஆயுளுள்ளவரை ஆரோக்கியமாக வாழலாம் என்ற நிதர்சனத்தை நாம் அனைவரும் மனங்கொண்டு செயற்பட முயல்வோம்.
ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர்)