இந்து தத்துவமரபின் வழி முகிழ்த்த அரும்பெரும் தத்துவவியலாக நோக்கப்படும் யோகக்கலையின் தாற்பரியத்தை தற்கால அறிவியல்யுகம், நன்கு உணர்ந்திருக்கிறது. தற்காலத்தில் இக்கலையைப் பற்றியதான புரிதல்கள்- அக்கறைகள் சர்வதேச அரங்கில் மேலெழுகை பெற்றிருக்கின்றமையால்தான் ஐ.நா உயர்சபைவரை எதிரொலித்துள்ளது. இது இந்துமதம் சார் கலையொன்றிற்குக் கிடைத்த அதியுயர் கௌரவமாக அமைகின்றது. நவீன மருத்துவவியலே வியக்குமளவிற்கு பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானமாகிய இக்கலை, சகலவிதமான உடல், உள ரீதியான நோய்களைக் குணமாக்கும் திறனை அதிகமாகப் பெற்றிருக்கிறமையே சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இத்துணை சிறப்புக்களையுடைய யோகம் எனும் விடயப்பரப்பு விசாலமானது. இதற்குள் இருக்கக்கூடியதான மெஞ்ஞான அறிவியல் விடயங்கள், நவீன விஞ்ஞான ரீதியான கொள்கைகளுக்கு முன்னோடியாக விளங்குகின்றதெனில் அதில் தவறிருக்க முடியாது. யோகம் எனும் சொல் ஆழ்ந்த பொருட்தத்துவத்தை எமக்குணர்த்தி நிற்கிறது.'யுஜ்' எனும் வினையடியினின்று பிறந்த இச்சொற்பதம் குறித்துநிற்கும் பொருளை நோக்கின், இணைத்தல் அல்லது ஒன்று சேர்த்தல் என்ற நேரடி அர்த்தம் கொண்டு, நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று முக்கிய பொருட்களையும் ஒன்றிணைத்து மனித வாழ்வியற் சமன்பாட்டிற்கு வித்திடு;ம் அறிவியற்கலையாக விளங்குகிறது. இதனை இன்னொருவிதமாகக் கூறும்போது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான ஓழுக்கநெறிகளை – வாழ்வியல் ரீதியான விடயங்களை போதிக்கும் துறை இதுவாகும். இறைவனால் மனிதனின் ஆன்ம ஈடேற்றம் கருதி அளிக்கப்பெற்ற அரும்பெரும் பொக்கிசமான இக்கலையைச் சூத்திர வடிவில் தொகுத்தளித்த பெருமை யோகி பதஞ்சலி மாமுனிவரையே சாரும். இவரே பின்னாளில் யோகத்தின் தந்தையாக போற்றிச் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் யாக்கப்பெற்ற யோக சூத்திரங்களே மூல நூலாக கொள்ளப்படுகிறது.
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக நம்பப்படும் இக்கலையின் தோற்றம் பற்றிக் கருத்துரைப்பதானது விவாதத்திற்குட்பட்டவகையாலும் உறுதியான எழுத்தாவணங்கள் இன்மையாலும் இது பற்றிய ஆய்வை மேற்கொள்வது கடினமானது. காரணம், சனாதன தர்மம் எனப்போற்றிச் சிறப்பிக்கப்படுகின்ற இந்துமதத்தின் தோற்றக்காலத்தைக் சரியாக கணிப்பதும் வரையறைக்குட்படுத்துவதும் முடியாத காரியம். எனவே ஆதியாய்; அனாதியாய் விளங்கும் இந்துமதமானது திடமான கால தேச வர்த்தமான வரையறைகளுக்கப்பாற்பட்டதாகவே விளங்குகிறது. ஊகத்தினடிப்படையில் அமைந்த தொல்லியலாராய்ச்சிச் சான்றாதாரங்கள் வெளிப்படுத்திநிற்கும் முடிவுகளின்படி சிந்துவெளி நாகரிகத்துடனே இந்துமதத்தின் வழிபாட்டியல் சார்ந்த தோற்றமும் ஆரம்பமாவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து நேரிடையாக நோக்கின் மிகப்புராதனமான இந்துமதத்தின் வேரிலிருந்து முகிழ்த்தெழுந்த யோகக்கலையும் சிந்துவெளியுடன் தொடர்புபட்டிருக்க வேண்டும் என்ற வாதமும் வலுக்கொள்வது தவிர்க்க முடியாது. அந்தவகையில் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் தியான நிலையிலுள்ள யோகியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளமை இக்கலை மிகவும் பழமையானது என்ற முடிவுக்கு வலுச்சேர்க்கிறது.தொடர்ந்து வந்த வேதகாலம் மற்றும் புராண, இதிகாச காலங்களில் இக்கலை பற்றியதான குறிப்புக்களைப் பரவலாக காணலாம். வேதாந்த, சித்தாந்த தத்துவங்கள், சாங்கிய, வைசேடிக தத்துவங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் போன்ற பல தத்துவங்களிலும் யோகத்திற்கு காத்திரமான முக்கியத்துவமளிக்கப்பட்டிருக்கிறது. பகவத்கீதையில் 6 ஆம் அத்தியாயத்தில் யோகத்தைப்பற்றிய ஏராளமான அம்சங்கள் உள்ளடங்கியிருக்கின்றமை குறிப்பிடற்பாலது.
யோகமார்க்கத்தை பயிற்சிமுறையினை அடிப்படையாகக்கொண்டு இருவகையாக பிரித்து நோக்கலாம். முதல்வகை உடல் சார்ந்தது. மற்றையது மனம் சார்ந்தது. இங்கு உடலை அடிப்படையாகக் கொண்ட யோகப்பயிற்சிகளை மேலும் இருவகையினதாகப் பகுக்கலாம். 1.ஹட யோகம். 2.லய யோகம்(குண்டலினி யோகம்) அதாவது தற்காலத்தில் அதிக கவனிப்புக்குரியதாக விளங்கும் ஹடயோகம் பற்றியதான விடயமானது 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகியான ஸ்வாத்மராமாவின் 'ஹடயோகப்பிரதீபிகா' எனும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசனப்பயிற்சிகளனைத்தும் இதற்குள்ளடங்குகிறது. மனம்சார் யோகப்பயிற்சி முறைகள் மூவகைப்பட்டன. அவை 1.கர்மயோகம் 2.பக்தி யோகம் 3.ஞான யோகம் என்பவையாகும். இங்கு உடலையும் மனதினையும் மையப்படுத்திய யோகத்தை இராஜ யோகமுறைக்குள்ளடக்கப்படுகிறது. யோகக்கலையின் தந்தையாக விளங்குகின்ற பதஞ்சலி மாமுனிவரின் 196 யோக சூத்திரங்களும் இராஜ யோகமுறைக்குள்ளேயே வருகின்றது. பொதுவாக நோக்குமிடத்து சித்தர்கள், யோகிகள் கடைப்பிடித்த யோக முறையானது பதஞ்சலி மாமுனிவரால் யாக்கப்பெற்ற இராஜ யோகமுறையை அடியொற்றியதாகும். இஃது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் கருவியாக தொழிற்படுகின்றது. அதாவது ஆன்மா விடுதலையடைந்து ஆனந்த நிலையை எய்த வேண்டும் என்பதே இதன் பிரதான குறிக்கோளாகும்.இது மனிதனது உடல், உள, ஆத்மிக நலன்களை மேம்படுத்துவதில் தொடங்கி இறுதி இலட்சியமான மோட்ச நிலையையடைதலீறான வாழ்வியற் கோட்பாடுகளை படிமுறையாக விளக்குகின்றது.
இராஜயோகம் வலியுறுத்துகின்ற முக்கிய விடயப்பரப்பாகியஅட்டாங்க யோகம் எனும் எட்டுவகையான வாழ்வியற்படிமுறைகள் காணப்படுகிறன. இது பற்றிய வி;ளக்கத்தைச்மிகச் சுருக்கமாக நோக்கும்போது,
1. இயமம்- தீயவற்றை விட்டொழித்தல் (கொல்லாமை, பொய்கூறாமை, களவுசெய்யாமை, காமமின்மை)
2. நியமம்- நன்றாற்றல் (பிறருக்கு உதவுதல், பரோபகாரம், தூய்மையுடைமை, வாய்மை, தவம் புரிதல்)
3. ஆசனம்- இருக்கை நிலை (உடல் நன்நிலையடைதலுக்கான உடல்சார்ந்த பயிற்சிமுறைகளை செய்தல்)
4. பிராணாயாமம்- சுவாசத்தை சீராக்கம் செய்தல்(பிராணனை தன்வயப்படுத்தி அடக்கியாளும் கலை)
5. பிரத்தியாகாரம்- ஐம்புலன்களையும் புறவுலகப்பொருட்களிலிருந்து விடுவித்து அகமுகமாகத் திருப்புதல்
6. தாரணை- மனதை ஒருநிலைப்படுத்தல்
7. தியானம்- மனதை கட்டுப்படுத்திஎடுத்துக்கொண்ட பொருள் மீதான உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்,தெளிதல் நிலைதிரியா மனதினைப் பெறல்
8. சமாதி- உணர்வொடுங்கிய நிலை அதாவது இறைவனுக்குச் சமமான (மோட்ச)நிலை.
அண்டத்திலிருப்பதுதான் பிண்டத்திலும் இருக்கிறது எனும் கருத்துருவே சித்தர்கள் வகுத்த யோகநெறியின் மையக்கருத்தியலாக அமைகிறது. அதாவது அண்டம் என்றால் உலகம் எனவும் பிண்டம் என்பது நமது உடல் எனவும் கொண்டு, அண்டமானது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கைகளாலானது. இதுபோலவே உடலிலும் ஐம்பூதங்களின் ஆதிக்கமானது நிலைபெற்றிருக்கிறது. இங்கு நிலம்- பருஉடல், நீர்- இரத்தம் மற்றும் சீல் போன்ற திரவம், தீ- உடல் வெப்பநிலை, காற்று- பிராணன் முதலிய தச வாயுக்கள், ஆகாயம் - மனம் போன்றவற்றைக் குறிப்பதாக அறியப்படுகிறது. இந்தப் பருவுடலானது மண்ணிலிருந்து தோன்றி உயிரடங்கப்பெறுகையில் ஈற்றில் மீண்டும் மண்ணுக்கே திரும்புகிறது. அதனால்தான் அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என யோகிகள் குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் மனித வாழ்வியல் இயற்கையுடன் பின்னப்பட்டிருக்கிறது என்ற விடயம் இழையோடியுள்ளது. இருப்பினும் தற்கால நவீனத்துவமானசூழலில் இயற்கையினின்றும் வழுவியதான- இயற்கையை விரோதிக்கும் வாழ்க்கைமுறையை வாழத்தலைப்பட்டதனாலேயே நமது வாழ்க்கையில் இத்துணை இடர்ப்பாடுகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது.இங்கு யோகமானது இயற்கையை ஆராதிக்கின்றது என்பதற்குச் சான்றாக 'சூரியநமஸ்க்காரம்' என்ற இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற பயிற்சிமுறையைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
இறுதியாக, தமக்கேயுரித்தான நீண்ட- நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தையும் தனித்துவமான வாழ்வியல் அடையாளங்களையும்பேணி உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கிய நம் சமூகத்தின் தற்போதைய நிலையானது பரிதாபத்திற்குரியதாகவே விளங்குகிறது. இந்நிலையில், நமது பண்பாட்டு வேர்களையும் அடையாள இருப்புகளையும் உறுதிசெய்து,அடுத்த சந்ததிக்கும் அளிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன் விரிந்திருக்கிறது. அதனொரு கட்டமாக, இந்துப்பண்பாட்டியலின் வழித்தோன்றலான யோகக் கலையின் தனித்துவத்தையும் இருப்பையும் பேண்தகு நிலையில் நிலைபெறச் செய்யவேண்டியது கட்டாயமாகிறது. இன்று நவீன மருத்துவவியலுக்கே சவால் விட்டுவருகின்ற குணப்படுத்த முடியாத பலவிதமான உடல், உள ரீதியான நோய்களைக் குணமாக்கும் திறன் யோகப்பயிற்சிகளுக்;குண்டென்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளமையால் இக்கலையின் மீதான நாட்டம், ஆர்வம், தேடல்கள்சர்வதேசமெங்கும் பெருகிவரும் நிலையில், நாமோ மேலைத்தேய மக்களது கலாசாரக் குப்பைகளை இறக்குமதி செய்தும் அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றியும் பக்கவிளைவுகள் அதிகம் நிறைந்த மருந்துவகைகளை பயன்படுத்தியும் வருவதால் பல்வேறுவிதமான உடல், உள, சமூக, பொருளாதார, கலாசார ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறோம். இன்று நம் சமூகம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை எமக்குள்ளேயிருந்து நாமே கண்டுபிடித்து நிவர்த்திக்க வேண்டுமே தவிர பிறர்மீது குற்றங்காணவிழைவது அபத்தமாகும். இதன்மூலமே எம்மீது வரும் பழிச்சொற்களைக் களைந்து சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். இவ்விதமான சுயமதிப்பீடுகளுக்கும் சுய விமர்சனங்களுக்குமான சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தவல்ல ஆற்றல் ஆன்மிக மறுமலர்ச்சிக்குண்டென்றவகையால் அதற்கான உந்துசக்தியாக யோகக்கலையினை மையமாக வைத்தே ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முன்முயற்சியாக கல்விக்கூடங்களில் இதனை மாணவர்ககளுக்குப் போதிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். காரணம், இளையோரிடத்தே அதிகரித்து வருகின்ற மது, போதைப்பொருட்கள், புகைத்தல் பாவனைகள் இதன் தொடர்ச்சியால் மேற்கிளம்புகின்ற பாலியல் வன்முறைகள், கொலை, களவு, குழுச்சண்டைகள்,குடும்ப வன்முறைகள் முதலிய பல்வேறு சமூகவிரோத நடவடிக்ககைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எனவே நமது பாரம்பரிய கலைமரபான யோகக்கலையை இன, மத பேதம் கடந்து பேணுவதனூடாக ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்துருவாக்கச் சிந்தனையை அனைவரிடத்திலும் வலுப்படுத்திச் செயலாற்ற முன்வர வேண்டியது அவசியமாகும்.
ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர்)