தற்காலத்தில் மக்களின் வாழ்வியலும் இந்து சமயத்தின் போக்குகளும்


tamil news:

பொதுநிலையில் சமயம் என்பது 'சமை' என்ற வேரடியிலிருந்து முகிழ்த்த பதமாகும். சமைத்தல் என்பது பதப்படுத்தல் அல்லது வளப்படுத்தல் என்ற பொருள் தாங்கி வருகிறது.

சாதாரண நிலையில் கணத்திற்கு கணம் மனித மனங்களிலிருந்து கிளர்ந்தெழுகின்ற எண்ணற்ற எண்ணங்களானவை நமது வாழ்வியலை சவாலுக்குட்படுத்தி வருகின்றன. இவ்வகையில் மேலெழும் எண்ண வகையறாக்களை செயல்நிலை அடிப்படையில் இரு வகைகளில் பிரித்து பார்க்கலாம். அவை நேர்முனைப்புடையவை மற்றையது எதிர் முனைப்புடையவை. எளிமையான வகையில் கூறின் நல்லெண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் என்பவையே அவையாகும்.

எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாகவும் பரிணமிக்கின்றன. இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சார்பு நிலைத்தன்மையுடையவை. நமது செயல்களை தீர்மானிக்கும் கருவியான மனதினை பக்குவப்படுத்தி இறைநிலையில் நிற்பதற்குரியதான பொறிமுறைகளை எடுத்துரைக்கும் தத்துவப்பரப்பாக இந்து சமயமானது திகழ்கின்றது.

மனிதனது பொதுப்புத்தியில் இந்து சமயம் என்பது வெறுமனே வழிபாட்டுமரபாகவே கருதப்பட்டுவருவதனால் இதற்குள் அமிழ்ந்திருக்கக்கூடிய ஆழ்ந்த தத்துவ விசாரங்களை உணர்ந்துகொள்ளக்கூடியதான சிற்றறிவு நம்மிடமில்லை என்பதே உண்மை. அக்கால அநுபூதிமான்களான மெய்ஞ்ஞானிகளது நுண்மாண் நுழைபுலத்தினால் உலகிற்கு உவந்தளிக்கப்பட்ட பல்லரிய ஞான நூல்களில் சூட்சுமமாக பொதிந்துள்ள உட்கருத்துக்களில் பிரதிபலிக்கப்படுகின்ற தத்துவப் பொருண்மைகளானவை தற்கால விஞ்ஞானிகளே கண்டு வியக்கும் அளவுக்கு அரும்பெரும் பொக்கிசங்களாக அமைகின்றன.

   உலகிலுள்ள எல்லாப்பிறப்புகளையும்விட மனித பிறப்பானது மகத்துவம் நிறைந்தது. மற்றைய பிறப்புகளுக்கில்லாத தனிச்சிறப்பு மனிதப்பிறப்பிற்குரியதாயிருப்பதற்கான காரணம் மனித பிறவி ஒன்றே ஆன்மாவின் இறுதி இலட்சியமான முக்திநிலையை எய்துவதற்கு அதாவது மீண்டும் பிறவாநிலையை அடைவதற்கான பிறப்பாகும். ஆனால் மண்ணுலகத்தில் நாம் இப்பிறவி எடுத்ததற்குரிய நோக்கத்தை மறந்து பொருளீட்டும் முனைப்பிலும் பணம் பதவிகளுக்காக அலைந்தும் அவமாகவே இப்பிறப்பைக் கழித்து வருகிறோம் என்பதே நிதர்சனமாகும். வேதாந்தங்கள், சைவசித்தாந்தங்கள், பகவத்கீதை, திருமுறைகள் மற்றும் திருமந்திரம் போன்ற எண்ணற்ற சித்தர் பெருமக்களின் பாடல்கள் முதலிய பல்வேறு இந்து தத்துவ நூல்களிலும் இது குறித்த கருத்துக்களை பரக்கக் காணலாம். இவை பற்றியெல்லாம் நாம் அதிகமாக, ஆழமாக சிந்திக்க முற்படுவதில்லை. மாறாக ஆலய வழிபாட்டுடன் மட்டும் எமது ஆன்மிக வாழ்க்கை முறையை முடித்துக்கொள்கிறோம். உண்மையில் இந்து தத்துவங்களுக்குள் இருக்கக்கூடிய ஆழ்ந்த தத்துவ உட்பொருட்கள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் அர்த்தமுடையவை, அற்புதமானவை. இன்று எத்தனை பேருக்கு சைவத்திருமுறைகளை சரிவர ஓதக்கூடிய ஆற்றல் காணப்படுகின்றன. முன்னர் சிறுவயதினரிடையே சைவத்திருமுறைகளை மனனம் செய்து பிழைகளின்றி ஒப்புவிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக காணப்பட்டமை கண்கூடு. அக்காலத்தில் கல்விச்சாலைகளில் மாணவர்களது திறமைகளுக்கு களம் அமைத்து போட்டிப் பரீட்சைகள் நடாத்தி பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டமை போன்று தற்காலத்தில் அவ்வாறான நிலைமை குறைவென்றே கூறலாம்.

   மக்களின் வழிபாட்டு முறைகளுள் ஆலய வழிபாடு முதன்மை பெறுகின்றது. மக்களது வாழ்வியலுடன் நேரடித்தொடர்புபட்டதும் ஆன்மிக முன்னேற்றத்திற்குரிய சாதனமாக விளங்கும் ஆலயங்கள் தற்போது அவற்றின் செயற்பாடுகள், நோக்கங்களிலிருந்து வழுவி நழுவிச் செல்கின்றமை துரதிஸ்டமானது. இவை பெரும்பாலும் வருமானமீட்டுதலையே குறியாக கொண்டு செயற்பட்டு வருவதனால் அவற்றின் மைய இலக்குகள் அடிபட்டுப்போயுள்ளன. நடைபெற்றுவரும் பெரும்பாலான ஆலய திருவிழாக்களை அவதானிக்கையில்  மக்களிடத்தே பக்தியுணர்வை காணமுடியவில்லை. மாறாக பொழுதுபோக்குக்கான களியாட்ட நிகழ்வுகளாகவே நடத்தப்படுவதனையும் பார்க்க முடிகின்றது. பணமீட்டலை மையமாகக்கொண்ட கோயில் நிர்வாகங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் பெரும்பாலான ஆலயங்களில் நிர்வாக ரீதியான பல்வேறு குழப்பங்கள், பிரச்சினைகள் தலைதூக்கி நீதிமன்றங்களிலும் வழக்குகள் நிரம்பி வருவதனையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன் பெரும்பாலான கோயில் பூசகர்களும்கூட அவர்களுக்குரித்தான கடமைகளை சரிவர செய்வதனை மறந்து அதாவது ஆலயக் கிரியைகளை ஆற்றுகையில் விதிமுறைகளை தெரிந்தோ தெரியாமலோ புறம்தள்ளி பணமீட்டலை மட்டும் குறியாகக்கொண்டு செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும். புராண இதிகாசங்கள் கூறுகின்ற கருத்தியலின் படி, கலியுகத்தில் மக்கள் மற்றும் பிராமணர்கள் எப்படி வாழ்வார்கள்? எப்படியிருப்பார்கள்? அவர்களது குணவியல்புகள் என்னென்ன? என்பவைபற்றியெல்லாம் தெளிவாக அலசப்பட்டிருக்கின்றது. காலமாற்றத்தின் படியே இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றதோவென எண்ணத்தோன்றுகின்றது. எனவேதான் இத்தன்மையான இழிநிலைகள் குறித்தெல்;லாம் நாம் எவர்மீதும் குற்றம்காண விளைவது அபத்தமாகும். எல்லாமே காலம் செய்த கோலமே என்றெண்ணி வாளாதிருப்பதனைத் தவிர வேறு வழியில்லை.


மதமாற்றத்தால் சைவசமயம் படும்பாடு

    சமகாலத்தில் 'மதமாற்றம்' என்ற கொடு நோயானது நம் தமிழ் சமுகத்தில் ஆழப் புரையோடி, பீடித்து வருகின்றது. இதற்கு பலிக்கடாவாகும் சமயங்களுள் இந்து சமயம் முதன்மை பெறுகின்றது. இங்கு மதம், சமயம் என்ற இருவேறு பதப்பிரிவுகள் வெளிப்படுத்தி நிற்கும் உட்பொருண்மைகள் வௌ;வேறானவையாகும். உண்மையில் சமயமானது மனங்களை சீரமைத்து - பக்குவப்படுத்தி -ஒன்றிணைக்கும் மார்க்கமாகவே விளங்க வேண்டுமே ஒழிய சீரழிப்பதாக இருக்கக்கூடாது. சமயம் என்பதன் பதவிளக்கமும் அவ்வாறே உள்ளது. ஆனால் மதம் என்பது சமயம் குறித்து நிற்பதான பொருட்தத்துவத்திற்கு முரணான அர்தப்படுத்தலையே வெளிப்படுத்தி நிற்கின்றது. மத உணர்வுகள் அதிகமாக அதிகமாக ஈற்றில் அது (மத) வெறியாக பரிணமிக்கி;றது. இது  மனித மனங்களில் இயல்பாகவே ஒட்டியிருக்கும் அகந்தைக் குணத்தை அதிகப்படுத்துவதாக அமைகிறது. அகம்பாவம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் மத்தியில் காமம், குரோதம், கோபம், சூது, வஞ்சகம், போட்டி, பொறாமை முதலிய பல தீய குணவியல்புகளின் எழுகைகளையும் தடுக்க முடியாது. இவற்றின் எழுச்சி, சமய முரணிலைகளை தோற்றுவித்து ஈற்றில் சமூக-இன அழிவிற்கே வித்திடுகின்றது. எனவே சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக எமது மனங்களில் அன்பை ஊற்றெடுக்கச் செய்தல் வேண்டும். இதனையே இந்து சமயமும் 'அன்பே சிவம்' என வலியுறுத்திக் கூறுவதுடன் உலகில் விளங்கும் அனைத்து சமயங்களின் கருத்தியல் நிலைகளும் அவ்வாறுதான் உள்ளது.


சனாதன தர்மம் எனப் போற்றிச்சிறப்பிக்கப்படுகின்ற இந்து சமயம் தற்காலத்தில் வேற்று மதவெறியர்களின் ஆக்கிரமிப்பிற்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு வருகின்றமை துரதிஸ்டமானது. இதற்கு பல்வேறு காரணங்களை சுட்டியுரைக்க முடியும். முக்கியமாக இச்சமயத்தில் இருக்கக் கூடியதான எல்லையற்ற சுதந்திரத்தன்மையினை குறிப்பிடலாம். மற்றைய சமயப்பிரிவுகள் போலல்லாது நிறுவனமயப்பட்ட கட்டமைப்பு இந்து சமயத்தில் இல்லை என்றே கூறமுடியும். சமயம் சார்பாக தீர்மானமெடுக்கும் அதிகாரம் ஆற்றொழுங்கில் எவரிடமும் கையளிக்கப்படாமை பெரும் குறைபாடாக குறிப்பிடலாம். ஆதியாய் அநாதியாக விளங்கும் இச்சமயத்திற்கு வழிபடுதலில் காணப்படும் தடையற்ற சுதந்திரத்தன்மை மற்றும் சமயத்தினை மாண்புறு நிலையில் பேணிப்பாதுகாக்க வல்ல சைவ ஆதீனங்கள் முதலிய சமய நிறுவனங்களின் எழுகை குறைவாக உள்ளமையும் இருப்பவைகளின் செயற்றிறனற்ற அதாவது சமய, சமூக பணிகளையாற்றுதலில் தமது பொறுப்பற்ற தன்மையதாக- வினைத்திறனற்றிருக்கின்றமையும் ஆறுமுகநாவலர் பெருமான் காலத்திற்கு பின்னர் துணிந்து கருத்துரைக்கும் அர்ப்பணிப்பான சமயவாதிகள் அருமையாக உள்ளமையும் இருப்பவர்கள்கூட பதவி, புகழ், பணத்திற்கு அடிமையாகும் நிலைமை காணப்படுகின்றமையும் இந்து சமயத்தின் பேண்தகு நிலையானது கேள்விக்குள்ளக்கப்படுகின்றது. இவ்வாறான குறைபாடுகள் களையப்படாதவரை வேற்று மதத்தவர்களின் உட்பிரவேசத்தினையும் யாராலுமே தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.

   தற்காலத்தில் இந்து சமயம் புறச்சமயவாதிகளை விட அச்சமயம் சார்ந்தோர்களாலேயே அதிகம் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றது. நமது சமயவாதிகள் மத்தியில் இருக்கக்கூடிய அக முரண்பாடுகள், உட்பகைகள், போட்டிகள் என்பவவை உச்சமடைந்து வருகின்றமையால் வேற்று மதப்பிரிவினர்களின் பிரவேசம் தவிர்க்கப்பட முடியாத வகையில் அமைந்து விடுகிறது. இந்நிலைமையினால் சிதைவுற்று வருகின்ற சமயத்தினை தூக்கி நிறுத்திப் பேணவல்ல தன்னலமற்ற சமயப்பெரியோர்களின் அவசியத்தன்மை பெரிதும் உணரப்படுகின்றது. தமிழ் சமூகத்தில் புரையோடியிருக்கின்ற மது, போதைப்பொருள் பாவனைகள் அதன் தொடர்ச்சியாக நீட்சியடைகின்ற சமூக விரோத செயல்கள் மற்றும் கலாசார சீரழிவுகள் என்பவற்றால் சமூகம் சீரழிவை சந்தித்து வருகிறது. அதுமாத்திரமன்றி, யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியானது தமிழினத்தின் இருப்பியலானது சவால் நிறைந்ததாக காணப்படுகின்றது. இத்தகைய நிலைமையின் பின்னணியில் தான், வேற்று மதப்பிரிவினரின் இந்து சமயத்தவர்களுக்கெதிரான பிரசார நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. ஒரு சமூகம் நலிவுற்றிருக்கையில் அச்சமூகத்தின் மீட்சியில் ஆபத்பாந்தவர்களாக இருப்பவர்களின் கருத்துக்கள் இலகுவில் மக்களிடத்தில் சென்றடைந்து விடுகின்றன. பலவித சலுகைகளாலும் தந்திரம் மிக்க கருத்துக்களாலும் கவரப்பட்ட மக்களின் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு தாய்ச் சமயத்தை விட்டோடும் இழிநிலை காணப்படுகின்றது. எச் சமயமாயினும் தாய்ச்சமயத்தினை விட்டு பிற சமயங்களுக்கு மாறுவதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமகாலத்தில் மதவெறியில் ஊறித்திழைத்துள்ள வேற்று மதவாதிகளின் கோரப் பிடியில் அகப்பட்டு சிக்கித் தவிக்கும் இந்து சமயம், புல்லர்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளினாலும் சலுகைகளால் மக்களைக் கவர்ந்திழுக்கும் இழி செயல்களாலும் அதன் இருப்பியலானது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருவதனை உணர முடிகிறது. வறுமையின் கோரப்பிடியில் அகப்பட்டுழலும் பின்தங்கிய கிரமப்புற மக்கள், மதமாற்றிகளின் நயவஞ்சகத்தனமான பேச்சுகளால் மதம் மாற்றப்படும் படலம் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இலங்கை அரசியலமைப்பு சட்டவாக்கத்தில்;  மதமாற்றமானது தண்டனைக்குரிய குற்றமாக கொள்ளப்படுகின்றது. அதனை நடைமுறையில் செயல்வலுப்பெற வைப்பதற்கு துறைசார்ந்த பெரியவர்களின் - சட்;டவல்லுனர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். 


சைவசமயத்தின் புனிதம் சிதைக்கப்படல்

   மிகப்புராதனமானதும் பல்லரிய தத்துவவியற் கருவூலங்களை தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்றதுமான இந்துமதத்தின் இருப்பியல் இன்று கேள்விக்குள்ளாகி அழிவின் விளிம்பில் நிற்கும் அவலநிலையை தடுத்து நிறுத்தவும், எதிர்காலத்தில் தொடராமலிருக்கவும் நம்மத்தியிருக்கக்கூடிய சமயப்பெரியோர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விழித்தெழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி பெருமெடுப்பில் ஆலயங்களைக்கட்டி கும்பாபிசேகங்கள், திருவிழாக்கள் செய்வதால் மட்டும் சைவசமயம் வளர்ந்துவிடும் எனக் கருதுவது முட்டாள்த்தனமாகும். காலமாற்றத்திற்கேற்ப சிந்தித்து சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தலுக்குரிய எத்தனங்களை எடுக்க வேண்டியது அனைவரதும் பொறுப்புமிக்க பணியாக அமைகின்றது. ஆலயங்களில் சமய அனுஸ்டான விதிகள் எல்லாம் காற்றில் பறக்க, பணநிலை மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றது. சிவாச்சாரியர்கள் முதல் வழிபடவரும் பக்தர்கள் வரை ஆலயங்களை புனிதத்தன்மையான - ஆன்மாக்களை பக்குவப்படுத்துகின்ற - அமைதி பேணும் இடங்களாக கருதிச்செயற்படாதிருப்பது கவலை தருகின்ற - துரதிஸ்டவசமான விடயமாகும். தற்காலத்தில்; பெரும்பாலான ஆலயங்களில் நடைபெறும் திருக்கூத்துக்களை பார்க்கும் போது கடந்த காலங்களில்;; வாழ்ந்து போந்த சைவத்தின் காவலர்களாக போற்றிச் சிறப்பிக்கப்படும் ஆறுமுகநாவலர் பெருமான் போன்ற சைவப்பெருவள்ளல்கள் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருக்கும்? சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். அவர்களின் இரத்தம் கொதிக்காதா என்ன? ஆலய வழிபாட்டு மரபில் சைவ அனுட்டான விதிகளை அனுசரிக்க வேண்டியது முக்கியமானதாகும். கிரியைகளாற்றும் அந்தணர்கள் முதல் வழிபாடாற்றும் அடியவர்கள் ஈறாக சைவசமயிகள் அனைவரும் இத்தகைய விதிமுறைகளுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். ஆறுமுக நாவலரினால் நமக்கு யாத்தளிக்கப்பெற்ற 'சைவ அனுட்டான விதி' என்கின்ற நூலானது சைவசமயிகள் அனைவரும் கடைப்பிடித்தொழுக வேண்டிய ஆசார முறைமைகளை விளக்கி நிற்கின்றது. ஆனால் இப்போது இந்நூலின்கண் உள்ள பெரும்பாலான விடயங்கள் நம்மவர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற யதார்த்தத்தையும் ஏற்றுத்தானாக வேண்டும். 

    முன்னொருகாலத்தில் ஆலயங்கள் நீதி பரிபாலனத்தின் மையங்களாக இருந்திருக்கின்றமை பற்றி சமய நூல்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றன. அக்காலத்தில் மக்களுக்கேற்பட்ட பல்வேறு பிரச்சினைகள்- பிணக்குகளை ஆலய முன்றலில் வைத்து தீர்த்துவைக்கப்பட்ட வரலாறு சம்பவங்களையும் பார்க்கிறோம். அவ்வளவுக்கு அக்கால மக்கள் ஆலயங்கள் மீதும் - கடவுளர்கள் மீதும் எல்லையற்ற பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்த காலமது. காலம்செல்லச்செல்ல பக்தி என்பது மக்கள் மனங்களில் கானல் நீராகி ஆலய வழிபாடென்பது வெறும் சடங்குகளாகிப்போயின. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் நிர்வாக ரீதியான முரண்பாடுகள், பிணக்குகள், ஊழல்கள் அதிகரித்து அவை தொடர்பான வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் நின்று இழுபடுவதானது நம் இனத்திற்கே பெரும் சாபக்கேடாக அமைகின்றது. இங்குள்ள பெரும்பாலான ஆலயங்களில் நிர்வாகங்கள் தெரிவுசெய்யப்பட்டு நிர்வகிக்கப்படுவது மரபு. தற்காலத்தில் ஊழல்கள் மலிந்த, வினைத்திறனற்ற நிர்வாகங்களால் குழப்பங்கள்- குரோதங்கள் மேலெழுகை பெற்றுள்ள நிலையில் ஆலயங்களின் தடையற்ற இயங்குநிலையானது கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருகின்றது. ஆலய கிரியைகள்- பூசை வழிபாடுகள் திருவிழாக்களே ஸ்தம்பித்துப்போகுமளவிற்கு நிர்வாக ரீதியான முரண்பாடுகள்- தலைதூக்கி வருகின்றமை கவலைக்குரியது. ஆலயங்களானவை அதிக வருவாய்களை ஈட்டிவரும் மையங்களாக விளங்குகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களால் இங்குள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திருப்பணி வேலைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் போன்ற இன்னோரன்ன செலவுகளிற்கென பெருமளவு பணங்களை ஆலய கஜானாக்களிற்கு அனுப்பி வருகின்றனர். இவற்றிற்குரிய சரியான கணக்கு விபரங்கள் உரியமுறையில் ஆலய நிர்வாகங்களால் காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களை பரக்க காணலாம். ஆலய அங்கத்துவம் வகிப்பவர்கள் குறித்த வகுதியினரே இத்தகைய பணக்கையாடல்களை மேற்கொள்வதனால் குழப்பங்களும் குரோதங்களும் கட்டவிழ்கின்றன.


ஆலயங்களானவை வெறுமனே சமய நிறுவனங்களாக மட்டுமல்லாமல் சமூக நன்நோக்கிலும் செயற்பட வேண்டியதன் அவசியத்தன்மை உணரப்பட வேண்டியது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரை பொருண்மிய நெருக்கடியானது சமூகத்தினை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளது. வறுமைப்பட்ட ஏழை மக்களின் துயர்களைவதற்கு அரச இயந்திரத்தினை மாத்திரம் நம்பியிராமல் ஆலயங்களை நிலைக்களனாகக்கொண்டு சமூக புரட்சியை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். இதனால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படக்கூடிய சாத்தியமுண்டு. முக்கியமாக திருவிழாக்காலங்களில் மாத்திரமல்லாமல் அனுதினமும் மூன்று வேளைகளிலும் ஆலயங்களில் அன்னதானம் வழங்கும் நடைமுறை அமுல்ப்படுத்தப்பட வேண்டும். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கனவு மெய்ப்பட காரியமாற்ற வேண்டும். மேலும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்ககை நாளாந்தம் ஏறுமுகமாகி வருவது சாதரணமாகி வருகின்றன. இதற்கான முக்கிய காரணம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடுகளேயாம். இதனை கருத்திற்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு பலவிதங்களில் ஆலய நிர்வாகங்கள் தன்னளவிலான பங்களிப்பினை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வெறுமனே திருவிழாக்கள் குடமுழுக்கு மற்றும் கும்பாபிசேகங்கள் என்;று வரும்போது தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்து பல்வேறு சமூகநலத்திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் செய்ய முற்படின் மிகப்பெரிய சமுக அதிர்வை நிச்சயம் உணரமுடியும். 

  

   தற்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை பொறுத்தவரையில் ஆலயங்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை என்றளவிற்கு அதிகளவு இந்து ஆலயங்கள் சிறியளவிலும் சரி பெரியளவிலும் சரி காணப்படினும் வழிபடாற்ற வரும் அடியவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சிப்போக்கினையே அவதானிக்க முடிகின்றது. இதற்கு பலவித காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டாலும் குறிப்பாக மக்கள் மத்தியில் ஆன்மிக நாட்டம் அருகிவருவதற்கு வறுமைப்பட்ட குடும்பப் பின்னணியும் ஒரு முகாந்திரமாகும். இந்நிலையில் நலிந்த பொருளாதாரப்பின்னணிகளைக்கொண்ட குடும்பங்களிற்கான பலவித மறுவாழ்வுத்திட்டங்களை ஆலயங்களை மையமாகக்கொண்டு அவர்களது தேவை அறிந்து அமுல்ப்படுத்துகையில் மக்கள் மத்தியில் ஆலயங்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையும் பக்தி விசுவாசம் என்பனவும் பன்மடங்கு அதிகரிப்பதற்கு வழிசமைக்கின்றன. அதாவது பூமாலைகட்டுதல், கோலமிடல் ஆலய உள்- வெளி பிரகாரங்களை துப்புரவு செய்தல் தோரணம் பின்னுதல், அலங்காரம் செய்தல், கலைகளை வளர்த்தல் பசுவளர்ப்பு, தேனி வளர்ப்பு முதலிய பலவிதமான திருப்பணி வேலைகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்;கும்போது தொழிலற்றிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே ஆலயங்களை தனியே கிரியை நடைமுறைகளுடன் மட்டுப்படு;த்தாது இவ்வாறான பலவித சமூக நலத்திட்ட பணிகளை நன்நோக்கில் முன்னெடுக்க இங்குள்ள ஆலய பரிபாலனங்கள் தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி கவனம்செலுத்தினால் வருமான ஏற்றத்தாழ்வுகளை இயன்றவரை குறைத்து வறுமைப்பட்ட குடும்பங்களது பொருளாதா நிலைகளை உயர்த்த முடியும். அத்துடன் ஆலய நிர்வாக ரீதியான பிணக்குகள் ஏதேனும் இருந்தால் தங்களுக்குள்ளேயே தீர்ப்பதற்கு முயற்சிக்கவேண்டுமேயொழிய நீதிமன்றங்களை நாடுவதும் பொதுவெளியில் அடிபிடிப்படுவதும் நம் சமயத்திற்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதையும் இந்துக்கள் வேற்று மதம் மாறிச்செல்வதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அத்தோடு ஆலய அர்ச்சகர்களும் வருமானத்தினை மட்டும் குறியாக கொண்டு செயற்படாமல் பக்தர்களின் நலன் கருதி தங்கள் பணிகளை ஆலய விதிமுறை தவறாமல் செவ்வனே ஆற்ற முன்வர வேண்டியதும் அவசியமாகும். ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்குமிடம். ஆண்;டவனின் அருள் சுரக்குமிடம். அத்தகைய புனிதமான இடத்தினை களங்கமுறாது பாதுகாக்க வேண்டியது இந்துக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.


ஸ்ரீ. நதிபரன் - நல்லூர்

Post a Comment

Previous Post Next Post