ஒரு மனிதன் உடல், உள, சமூக, ஆன்மீக சிறப்புப் பெற்று ஆரோக்கியமாக வாழ்வதே பயனுள்ள வாழ்க்கை, மனம், உடல், ஆன்மா இணைந்து செயற்படுவதே சிறந்த பலனைத்தரும், ஒரு மனிதனை அவனது உடலோடு, மனதோடு, ஆன்மாவோடு, தொழிலோடு இணைப்பதற்கு யோகாசன கலை உதவுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலில் நோய் ஏற்படாதிருக்கவும், நோய் ஏற்பட்ட பின் அதை குணமாக்கவும் யோகாசனம் பயன்படுகிறது.
ஏறத்தாழ 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் யோகக்கலை இந்து சமய தத்துவப்படி ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி காட்டுகிறது. பதஞ்சலி முனிவரே யோகக்கலையின் தந்தை எனக்கூறப்படுகிறது. இவர் இக்கலையை அனுஸாஸனம் என்று கூறியுள்ளார். மரபு வழிவரும் கோட்பாடுகள் என அனுஸாஸனத்திற்கு விளக்;கம் காணப்படுகிறது. யோகம் என்பது தன்னை அறியும் அறிவு; ஒரு விடயத்தில் மனதைச் செலுத்தி அமைதியாக இருத்தல் ; அலையும் மனதை அலையவிடாது நேர்வழிப்படுத்தும் செயல் என அறியமுடிகிறது.
மேலும் யோகம் என்ற சொல் ஒருங்கிணைத்தல் எனப் பொருள்படினும் முறை, செயற்பாடு, ஆற்றல், தியானம், துறவு என்ற பொருள் தருவதும் குறிப்பிடத்தக்கது. யோகக் கலையின் தந்தையான பதஞ்சலி, 'யோகே சித்த விருத்தி விரோத.... என்ற சூத்திரத்தில் யோகம் என்பது மனத்தின் செயற்பாடுகளைத் தடுத்தல் என்று கூறுகிறார். ஒருவன் தன்னை அறியும் அறிவு, பயிற்சி முறை, செயல்முறை, வாய் மொழிமுறை இவற்றால் குருகுல முறையில் குருவிடமிருந்து சிஷ்யர் இக்கலையை அறிந்து கொண்டனர்.
யோகம் என்ற சொல் அதிர்ஷ்டத்தையும் குறிக்கப்பயன்படுகிறது. யோகக்கலை பற்றி அறிவது; அதனைக் கற்றுக் கொள்வது இவை அனைத்திற்கும் எமக்கு 'யோகம்' இருக்கவேண்டும். யோகமார்க்கம் உடல் சார்ந்ததாகவும், மனம் சார்ந்ததாகவும், செயல் சார்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஹடயோகம், லயயோகம் (குண்டலினியோகம்) ஆகிய இரண்டும் உடல் சார்ந்ததாகவும், கர்ம யோகம், பக்தி யோகம், ஞானயோகம் ஆகிய மூன்றும் மனம் சார்ந்ததாகவும் கூறப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் யோகி ஸ்வராத்மா ஹடயோகப் பிரதீபிகா என்ற நூலில் ஹடயோகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஹடயோகம் என்பது ஹதயோகம் எனவும் கூறப்படுகிறது.
உடற்பயிற்சிகளான ஆசனங்கள், பிராணாயாமத்தில் கவனம் செலுத்துதல் ஹடயோகாவிற்குள்ளும், மனதை ஒருமுகப் படுத்தி தியானம் செய்வதில் கவனத்தைச் செலுத்துதல் ராஜயோகத்தினுள்ளும், செயல்கள் மூலம் இறைவனை அடையும் வழி கர்ம யோகத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகத்தின் எட்டு நிலைகளாக, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன காணப்படுகின்றன. இயமம் - தீயபண்புகனை விடுதல், நியமம் - நல்ல ஆற்றல், ஆசனம் (இருக்கைநிலை) உடல் சார்பயிற்சிகள் செய்தல், பிராணாயாமம் - சுவாசத்தை சீராக்கல், பிரத்தியாகாரம் - ஐம்புலன்களை அடக்குதல், தாரணை - மனதை ஒரு நிலைப் படுத்தல், தியானம் - மனதை ஒருநிலைப்படுத்தி உண்மையை சிந்தித்தல், சமாதி - உணர்வுகளை ஒடுக்கிய நிலை இவை படி முறையாகப் பின்பற்றபபடும் போது யோகக் கலையின் முழுமைப் பயனும் கிடைக்கிறது.
வரலாற்றுப் பாதையில் யோகக்கலை :
வேதங்களில் இருக்கு வேதத்தில் (ரிக்வேதம்) தயா என்ற சொல் தியானம் என்ற சொல்லுக்கு சமபொருள் கொண்டதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் யோகக்கலை பகுத்தறிவுச் சிந்தனை முறையாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஸ்ருதி என்பது நேராக வெளிப்படுத்தப்பட்ட ஒலி என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது செவிமடுக்கும் செயற்பாட்டினால் அடுத்த தலை முறையினரிடம் சென்றடைந்துள்ளது.
உப நிடதங்களில் ஈடுபாட்டுடன் நெருங்கி அமர்தல் என்ற பொருள் தரும் சமஸ்கிருதச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு யோகம் காணப்பட்டது. வேதங்களின் இறுதிப் பகுதிகளாகவும், வேதங்களின் சாரமாகவும், இந்து சமயத்தின் கருத்து, பண்பாடு இவற்றின் அடிப்படை ஊற்றுகளாகவும் விளங்கும் உப நிடதங்களில் தைத்ரிய உபநிடதம் விஞ்ஞான மனகோசா என்ற தலைப்பில் யோகா பற்றிக் கூறியுள்ளது. கடோபநிடத்தில் பிராணாயநிஷத் என சுவாசம் பற்றிய விளக்கம் உண்டு. தியானத்தையும், யோகத்தையும் அடிப்படை உண்மை நிலையாக வெளிப்படுத்தி இராஜயோகம் பற்றி மண்டூக உபநிடதம் கருத்துரைக்கிறது.
பிற்கால உபநிடதங்கள் ஓம் என்று சொல்லப்படும் பிரணவ ஒலி வளர்ச்சியடைந்து நாதயோகம் அல்லது ஒலிமுறையோகம் தோன்ற வழி தந்தன. கடோப நிடதத்தில், தன்னை அறியும் ஞானம் கிடைக்க யோக மார்க்கமே வழி எனக் கூறப்படுகிறது. ஈஷோபநிடதங்கள் பகவத்கீதை போல் கர்மயோகத்தைப் போதிக்க முயற்சித்தன. பிருகதாரண்ய உப நிடத்தில் பிராணாயாமம், சாந்தோக்கிய உபநிடதத்தில் புலனடக்கமான பிரத்யாஹாரம், சாந்தோக்கிய உடநிடதத்தில் புலனடக்கமான பிரத்யாஹாரம், மைத்ரயனீய உபநிடத்தில் பிரணாயாமம், பிரத்யாகாரம், தியானம், தாரணை தர்க்கம், சமாதி ஆகிய ஷடாங்கங்கள் காணப்படுவது சுட்டத்தக்கது.
புராணங்களில் யோகர் மூலாதாரத்தில் விநாயகர், சுவாதிட்டானத்தில் பிரமா, மணி பூரகத்தில் விஷ்ணு, அநாகத்தில் உருத்திரன், விசுத்தியில் ஜீவன் என யோகச் செய்திகள் புராணங்களில் காணப்படுகின்றன.
இராமாயணத்தில் இயமம், நியமம், தர்மம் முதலான யோகநெறிகள் சுட்டப்படுகின்றன. வசிஷ்ட முனிவர் இராம பிரானுக்கு யோகம் பற்றிக் கூறியுள்ளார். யோக வாசிஸ்டத்தில் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் யோகம் பற்றி வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
மகாபாரதத்தில் பகவத்கீதை தவத்தை விட, ஞானமுறையை விட, வேத தர்மங்களை விட மேலானது யோகம் எனக் கூறியுள்ளது. கிருஷ்ண பரமாத்மா, அதிகம் உண்பவன், உண்ணா திருப்பவன், அதிகம் உறங்குபவன் முதலானோருக்கு யோகம் கை கூடாது என அர்ச்சுனனுக்குக் கூறியிருப்பது மனம் கொள்ளத்தக்கது. பகவத் கீதை கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்பவற்றை ஆறு அத்தியாயங்களில் எடுத்துக் கூறியுள்ளது. கர்மயோகத்தில், 'கடமையைச் செய், பலனில் பற்று வைக்காதே' என்று மனிதனை வழிப்படுத்தும் இடம் காணப்படுகிறது. பலனை விரும்பாது செய்யும் செயல் நிஷ்காம கர்மம் என அழைக்கப்படும். இக்காலத்தில் யோகக்கலை அதிக வளர்ச்சி பெற்றுள்ளது.
தொடர்ந்து 10 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் வாயிலாக இக்கலை பெருவளர்ச்சி கண்டது. நாத சித்தர் பள்ளி, மகா ஈஸ்வர சித்தப்பள்ளி என்பன இக்காலத்தில் யோகக் கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. மனிதனிடமுள்ள பிராணன், மனம், சித்தம், சக்தி ஆகியவை இணைந்து செயற்பட யோகக்கலை சிறந்தவழி எனக் கூறப்படுகிறது. ஒருவன் தன் மனோசக்தியை வளர்த்துக் கொள்ள இக்கலை உதவுகிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மேனாட்டுக் கல்வியூடாக யோகக்கலை வளர ஆரம்பிக்கிறது. இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், முதலியோர் இக்கலை அதிக வளர்ச்சி காண அரும்பாடுபட்டனர். சுவாமி குவலயானந்தா 1924 ஆம் ஆண்டு கவல்ய தாமா என்ற ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்து யோகக் கலை விஞ்ஞான ஆராய்ச்சியில் இணைக்கப்பட வழி வகுத்தார்.
கி.பி 10 ஆம் நூற்றாண்டு - 12ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் வாழ்ந்த பதினெண் சித்தர்கள் யோகக் கலையை வளர்த்துள்ளனர். சித்தர்களின் செயற்பாடுகளில் யோகமுறை 'காயசாதனை' என அழைக்கப்பட்டது. சிவ வாக்கியர் என்பவர் பிராணாயாம முறைகளை விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அரணாக நிற்பது யோகம் என ஓளவையார் கூறுகிறார். பட்டினத்தார் அட்டாங்க யோகம் பற்றித் தனது பாடல்களில் விளக்கியுள்ளார். பத்திரகிரியார் யோக நித்திரை, குண்டலியோகம், பிராணாயாமம், அட்டாங்க யோகம் என யோகச் செய்திகளைத் தன் பாடல்களில் கூறியுள்ளார். இடைக்காட்டுச் சித்தர், தவம் செய்தல், ஜெபம் செய்தல் ஆகியவற்றை விட யோகப்பயிற்சி சிறந்தது எனக் கூறுகின்றார்.
இதற்குமுன் 1960 ஆம் ஆண்டுவரை யோகக்கலையின் பயன்களை உலக மக்கள் அறிந்திருக்கவில்லை. தற்காலத்தில் உடல் நலத்தின் முக்கியத்துவம், அமைதியான வாழ்க்கை, உடல் நலம் ஆகியவற்றில் விழிப்புணர்வு பெற்று மக்கள் யோகக் கலையைப் பயின்று பயன்பெறுகின்றனர். எல்லா நாடுகளிலும் யோகா பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டு மக்கள் யோகப் பயிற்சி பெற்று நல் வாழ்வு வாழ வழி கிடைத்துள்ளது. கிருஷ்ணமாச்சாரியார், ஓஷோ மகரிஷி, மகேஷ்யோகி, யோகி அரவிந்தர், ஸ்ரீ டீ.மு.ளு.ஐயங்கார், வேதாத்ரி மகரிஷி ஆகியோர் யோகக்கலைக்கு அரும்பணியாற்றியுள்ளனர். ஆங்கில மருத்துவர்களும் யோகாவைத் தங்கள் சிகிச்சைகளில் இணைத்துக்கொண்டு அதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். இரத்த அழுத்தம், மன இறுக்கம், சர்க்கரை நோய், மூட்டுவலி, அதிக உடல் எடை இவற்றிற்கு சிறந்த நிவாரணியாக யோகப் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
சித்தர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் திருமூலர் யோகப்பயிற்சி மனிதனின் மன, உடல் நலத்தைப் பேணும் வழிகளைத் திருமந்திரத்தில் கூறியுள்ளார். திருமந்திரத்தில் ஐந்தாம் தந்திரம் - 7 யோகம் பற்றிய பாடல். இல: 1457.
நெறி வழியே சென்று நேர்மையில் ஒன்றி
தறி இருந்தாற் போலத் தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண் என்று உணரா
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே.
இவ்வாறு பாடல் இல 1457 - 1466 வரை உள்ள 10 பாடல்களும் யோகக்கலை பற்றிய செய்திகள் கொண்டவையாக உள்ளன.
இவ்வாறு பல வழிகளில் வளர்ந்து வந்த யோகக்கலை பற்றிய விழிப்புணர்வு இன்று பல நாடுகளில் ஏற்பட்டதால் மக்கள் யோகக் கலையைப் பயிற்சி செய்து பயனடைய முன்வருகின்றனர். யோகக்கலையைப் பயிற்சி செய்வதற்கு யோகா பயிற்சி நிலையங்கள் உருவாகி வருகின்றன. இன்று சர்வதேச யோகாதினம் யூன் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுமளவிற்கு யோகக்கலை மருந்தில்லா மருத்துவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. யோகக் கலையைப் பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் எற்படுத்தும் நோக்குடனேயே சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. மனித வாழ்வை மேம்படுத்தும் உயரிய கலையான யோகத்தை அனைவரும் கற்றுப் பயனடைய இந் நாளில் உறுதிகொள்வோம்.