கேளிக்கை நிகழ்வுகளாக மாறிவரும் ஆலயத் திருவிழாக்களும் அருகிவரும் மக்களின் ஆன்மீக நாட்டமும்


ஆலயங்களானவை ஆன்மாக்கள் அமைதி கொள்ளும் புனிதமான இடங்களாக அமைதற்குரியவை. ஆலயங்கள் எவ்வாறு  கட்டப்பட வேண்டும்?, பேணிப் பராமரிக்கப்பட வேண்டும்?,  பூசை முறைகள், திருவிழாக்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்றெல்லாம்  இறைவனால் அருளப்பட்ட ஆகம நூல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், கோயில்களுக்கு  அடியவர்கள் எவ்வாறு செல்லல் வேண்டும்?, எவ்வாறு வழிபடல் வேண்டும்?,  எப்படி நடந்து கொள்ளல் வேண்டும்?, ஆலயங்களில்  செய்யக்கூடியவை எவை?, செய்யத்தகாதவை எவை? என்ற பல்வேறு விதிமுறைகளை அழுத்திச் சொல்லும் சைவசமய நூல்களும் நிறையவே இருகின்றன. இத்தகைய ஒழுங்கு விதிகள் எல்லாம் இக்காலத்தில் சரியாக பின்பற்றப்படுகின்றனவா எனில், இல்லை என்பதே பதிலாக வரும்.

 ஒரு சிறிய உதாரணம்; 

 தற்போது ஆலயங்களில் அலறும் ஒலிபெருக்கிகளில் அந்தண சிவாச்சாரியார்கள் ஓதும் வேத மந்திரங்கள் ஒலிக்கப்படுவது மகாதவறு  என்பது தெரிந்தும் அத்தவறு தொடர்ந்தும் விடப்படுகிறது.  இப்படியான பல பெரும் தவறுகள்  தற்காலத்து ஆலயங்களில் சர்வ சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.  இத் தவறுகள் தொடர்ந்தும் விடப்பட்டுக்கொண்டிருப்பது  எமது சமயத்திற்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல.  மாறாக பல்வேறு எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனைய மதப்பிரிவுகள் போல் கட்டுப்பாடுகள், வரையறைகள் இந்துசமயத்திற்குக் கிடையாது. கட்டற்ற சுதந்திரத்தன்மை வாய்ந்த மதமாக எமது சமயமே விளங்குகின்றது. இந்து மத சுதந்திரத்தை தமக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆலயங்களில் மத அராஜகம் புரிவது, புரியமேற்படுவது ஏற்புடையதல்ல. தற்போது ஆலயங்களிலே இடம்பெற்று வருகின்ற பஞ்சமாபாதகச் செயல்கள்  மனதை வருத்தும் சோகதிற்குரியவை.  அவற்றை இங்கு பட்டியலிட்டு விவாதம் புரிய முற்படவில்லை.

எமது சமயம் ஆதியானது; அநாதியானது. பல்வேறு அரும்பெரும் சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் எமது சமயமானது ஏனைய சமயப் பிரிவுகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதுடன் இந்துமதக் கோட்பாடுகள் பல ஏனைய மதத்தினர் பின்பற்றிவ௫ம் பெருமைக்குரிய மதமாகவும் விளங்குகிறது. வேற்று நாட்டவர்கள் வியக்குமளவிற்கு  பல மதக்கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் முதலிய இன்னோரென்ன பல அரும்பெரும் அம்சங்களின் உட்பொதிவாக எமது சமயம் விளங்குவது நாம் பெருமை கொள்ளக்கூடிய விடயமாகும். அவற்றை மேலை நாட்டினர் கூட நுணித்தாய்யு செய்து தமது கலாசார நடைமுறைகளுக்குள் உட்புகுத்தி பின்பற்றி வருவதைக் காண்கின்றோம். ஆனால் நாமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அழிவைத் தரும் விடயங்களில் கவனம் செலுத்தி வருவது கவலைக்குரியது.

இந்து மதத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் ஆழமான, அரிய தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. இருந்தும், நாம் அவற்றை  சரியாக புரிந்து கொள்ள முற்படாமை ஆலயங்களில் பல தவறுகள் நிகழ்வதற்கு ஏதுவாக அமைகின்றது. அநேகமான ஆலயங்களில் இடம்பெறுகின்ற கிரியைகள் மற்றும் திருவிழாக்களை நோக்கினால், பெரும்பாலும் பக்தி மயமான சூழலை அவதானிப்பது அரிது. மாறாக, கேளிக்கைகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. ஆலயத்தில் இடம்பெறுகின்ற அத்தவறுகளை சிலர் கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றனர். ஒரு சிலரோ தட்டிக்  கேட்க முடியாதவாறு வாளாதிருக்கின்றனர். எமது சமூகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? திருவிழாக்களில் குரோதங்கள், வன்மங்கள், போட்டி  பொறாமைகள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றால்  பலவித அசம்பாவிதங்கள் நடைபெற்று வருவது கண்கூடு.


தற்போது ஆலயங்களில் வெளிநாட்டு பணமானது தாராளமாகக் கொட்டப்படுகின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உழைத்து அனுப்பும் பணத்தினை பெரும்பாலும் அனாவசியமான வழியில் செலவிடுகின்றனர். பணத்தினால் எதையும் செய்யலாம் என்ற அசாத்திய துணிவு தற்கால சமூகத்தினை  ஆட்கொண்டுள்ள நிலையில் பெரும் பணத்தினை  செலவிட்டு வெறும் பகட்டிற்காக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றமையினால் பக்தியானது கானல் நீராக மாறிவருகின்றது. பக்தியின் மகத்துவத்தினை உணராதவர்களாய் பணத்தினால் இறைவனை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கும் நாம் போரின் தீ நாக்குகளுக்கு உட்பட்ட  வன்னி மக்களின் நிலையை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும். எத்தனை ஆயிரம் பேர் தமது வாழ்வியலைத் தொலைத்துவிட்டு நிர்க்கதி நிலையில் இருக்கிறார்கள்? எத்தனையோ  ஏழைச் சிறார்கள் தமது எதிர்காலத்தை வளமாக்கும் கல்வி என்ற சொத்தைப் பெறுவதற்காக ஏங்கி நிற்கிறார்கள்? எத்தனை எத்தனை விதவைத் தாய்மார்கள் தமது அன்றாட வாழ்கையை நகர்த்த முடியாமல் அல்லாடுகிறார்கள்? இப்படி எத்தனை அவலங்கள் நம் நாட்டில்? ஏன், நம் இனம் இருக்கின்ற நிலையில் ஆடம்பரங்களுக்காக பணத்தினைக் கொட்டும் கயவர்களின் மனங்களை என்னவென்று சொல்வது?  இங்கு குறிப்பிடுவதிலிருந்து கோவில்களுக்கு பணங்களை வழங்கவேண்டாமென தவறாக அர்த்தப்படக்கூடாது. ஆலயங்களில்  பூசைகளுக்காக,அபிஷேகங்களுக்காக மற்றும் திருவிழாக்களுக்காக  பணத்தினை செலவிடுவதற்கு எதிராக இதனை எழுதவில்லை. மாறாக, திருவிழாக்களில் தேவையற்ற ஆடம்பரங்களுக்காக  செலவிடும் பணத்தினை வேறு ஏதேனும் தர்ம காரியங்களிற்கு  செலவிட்டோமானால் இறைவனின் அருள் நமக்கு பன்மடங்கு கிடைக்கும் என்பது திண்ணம்.

இன்றைய திருவிழாக்களானாலும் சரி சாதாரண நித்திய பூசை வழிபாடுகளானாலும் சரி ஆன்மீக உணர்வுடன் செய்யப்படுவதில்லை. ஆலயங்களில் ஆன்மீக  உணர்வு இல்லாவிடின் ஆலயங்கள் இல்லாமல் இருப்பதே மேல் என்று சொல்லலாம். ஆலயங்கள் என்பவை ஆன்மா ஈடேற்றம் தரும் இடங்களாக அமைய  வேண்டும். ஆனால் இன்றைய ஆலயங்களில் அவற்றைக் காணமுடிவதில்லை. தற்போது ஆலயங்களில் இடம்பெறுகின்ற பல்வேறு குரோதங்கள், வன்மங்கள், போட்டி  பொறாமைகள், சண்டை சச்சரவுகள் ஆன்மீக உணர்வை வளர்ப்பவை அல்ல. அத்துடன் அநேகமான இந்து ஆலயங்களில் பல மோசடிகளும் பெருமளவு இடம்பெற்று  வருகின்ற கண்கூடு. இவையெல்லாம் ஆன்மீக  உணர்வுக்கு விரோதமானவை. எனவே எமது சமயத்திலுள்ள ஒவ்வொருவரும் அர்ப்பணித்துச் செயலாற்ற வேண்டும். இந்து ஆலயங்கள் வெறும் சமய நிறுவனங்களாக மட்டுமின்றி  சமுக நிறுவனங்களாக மாற்றம் பெற வேண்டும். புதிதாக கோயில்கள் கட்டுவதும்,  கோபுரங்கள் எழுப்புவதும், கோடிகள் செலவிட்டு கும்பாபிஷேகம் நடாத்துவதும் இறைவனுக்கு அவனின் கருணைக்கு ஏற்புடையதாகாது. இறைவன் அன்புருவானவன். மனதிலே கோயில்  கட்டிப் பூசித்த பூசலாருக்கு அருள் புரிந்த வரலாற்றை நாம் பார்க்கின்றோம். அந்தவகையில் தன்னலமற்று தன்மீது பக்தி செலுத்துகிறார்களே அவர்களுக்கே இறைவன் அருள் புரிவான் என்ற தத்துவத்தை புராணங்கள் இதிகாசங்கள் வாயிலாக  அறிகிறோம். எனவே ஆலயத் திருவிழாக்களில் கேளிக்கைகள் களியாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆலயத்தினை அமைதி பேணும் இடமாகக் கொண்டு பக்தியை வளர்க்க இயல வேண்டும்.  அப்போது தான் நாமும் நம் சார்ந்த தலைமுறையும் சமூகமும், ஏன் நம் நாடே சீராகும் எனில் பிழையில்லை.


ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர்)

Post a Comment

Previous Post Next Post