உப-யோகா (Upa-Yoga)
உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும். உடல்நிலை என்று நான் குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சிநிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். சிலர் யோகாவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போல செய்வதற்கு பதிலாக, உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்த வழிமுறை. அதனால் ஈர்க்கப்பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில் ஈடுபடலாம்.
நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல் இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்திநிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள் மூட்டுக்களில் உயவுத்தன்மை (lubrication) இல்லாமல் போகிறது. அப்படி அந்த உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக நாட்களுக்கு தாங்காது. ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு வாய்ப்புள்ளது.
உடலின் நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று உள்ளன. இந்த உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத் தன்மையை (lubrication) வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்ற சக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.